நிலத்தடி நீரை எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி? 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி

நிலத்தடி நீரை எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது? என்று 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடாலடிக் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலத்தடி நீரை எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி? 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி


சென்னை: நிலத்தடி நீரை எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது? என்று 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடாலடிக் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கநல்லூரைச் சேர்ந்த இளையராஜா தாக்கல் செய்த மனுவில், கடந்த பத்து ஆண்டுகளில் நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நங்கநல்லூரில் செளந்தரராஜன், சுந்தர், நாகராஜன், ஏழுமலை, யுவராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து லாரிகள் மூலம் பெரிய நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் விநியோகித்து வருகின்றனர். 

இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், எங்கள் பகுதியில் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்பனைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார். 

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நங்கநல்லூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்து விற்பனைச் செய்யப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை வரும் 24-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நங்கநல்லூரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என்று காவல்துறை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையை படித்த நீதிபதி, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்கள் யார்? நிலத்தடி நீரை எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க எத்தனை லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து வரும் 28ம் தேதி பதில் தரவும், நங்கநல்லூரில் சட்டவிரோதமாக நீர் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் வருவாய்த் துறை அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவின் போது, காவல்துறையினர் முறையாக செயல்பட்டால்தான் சமுதாயத்தில் எதிர்பார்க்கும் மாற்றத்தைகொண்டு வர முடியும் என்று நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com