ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு: ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கில் ஆதாரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு: ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கில் ஆதாரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா. ரஞ்சித் தாக்கல் செய்த மனு:
கடந்த ஜூன் 5-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து பேசினேன். ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருப்பனந்தாள் போலீஸார் ஜூன் 11-ஆம் தேதி என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் செந்தமிழ் நாட்டு சேரிகள் எனும் புத்தகத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதை பேசினேன். நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1-இன் படி எனக்கு பேச்சுரிமை உள்ளது. அதனை கருத்தில் கொள்ளாமலும், முதல்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு,  நீதிபதி வி.பாரதிதாசன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பல்வேறு புத்தகங்கள் அடிப்படையில், குறிப்பாக தமிழக அரசு வெளியிட்ட புத்தகத்தில் உள்ள குறிப்புகளையே பா. ரஞ்சித் பேசியுள்ளார். இவரது பேச்சால் எவ்வித சட்ட - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் போலீஸார் ஜூன் 11-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பேச்சுரிமை உள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.
அப்போது, நீதிபதி பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? எனக் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில் பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைக்கலாம் எனவும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு, ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் எனக் கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினார்? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நீதிபதி, பா. ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய  திருப்பனந்தாள் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com