Enable Javscript for better performance
மதுபோதை நபரால் நிகழ்ந்த விபத்தில் சமூக சேவகரின் மனைவி மரணம்: சீமான் கடும் கண்டனம்- Dinamani

சுடச்சுட

  

  மதுபோதை நபரால் நிகழ்ந்த விபத்தில் சமூக சேவகரின் மனைவி மரணம்: சீமான் கடும் கண்டனம் 

  By DIN  |   Published on : 25th June 2019 03:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  seeman_2

   

  சென்னை: கோவையில் மதுபோதை நபரால் நிகழ்ந்த விபத்தின் காரணமாக சமூக சேவகரின் மனைவி மரணமடைந்த விவகாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  கோவை ஜம்பு கண்டி பகுதியில் இருக்கும் மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால் சமூகப் போராளியும், மருத்துவருமான கோவை ரமேஷ் அவர்களின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றச் செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். பதைபதைக்க வைக்கின்ற இக்கொடுமையான சம்பவத்தில் மருத்துவர் ரமேஷின் மகள் சாந்திதேவியும் பலத்த காயம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

  பெரும்பான்மையான மக்களைக் குடிகாரர்களாக மாற்றியிருக்கிற 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை கருதி, ஒரு அறிவானச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்கத் தெருவெங்கும் படிப்பகங்களை திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்து வைத்து இந்த மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தி வருகிறது.

  மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன் மனித வெடிக்குண்டுக்குச் சமம் என்கிறது உயர் நீதிமன்றம். அத்தகைய ஒரு குடிநோயாளியாலும், அக்குடிநோயாளியை உருவாக்கிவிட்ட அரசாலும்தான் இன்றைக்கு மருத்துவர் ரமேசின் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது.

  மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால் தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் ரமேஷ் சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. காயம்பட்டத் தனது மகளைகூடப் பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசினை அறிவிக்க வைத்திருக்கிறார்.

  கோவை மருத்துவர் ரமேஷ் அவர்கள் எனது நீண்டகால நண்பர். பேரழிவுகளை ஏற்படுத்துகிற நாசகாரத் திட்டங்களை ஆய்வுசெய்து அதற்கெதிராக குரல் கொடுத்து போராடி வருகிற சமூகப்பற்றாளர். அவரது உற்றத் துணையாக விளங்கிய மனைவியை இழந்து வாடும் அருமை நண்பர் ரமேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து இருக்கின்ற அருமை மகள் சாந்தி தேவி அவர்கள் கூடிய விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என எனது நம்பிக்கையினைப் பகிர்ந்து கொள்கிறேன்.

  ஆகவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க இனிமேலாவது மதுவிலக்கினைச் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும்

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai