ஒரே நாளில் 5 செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 36 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்

கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் சென்னையில் மயிலாப்பூர், கோட்டூர்புரம் உட்பட 5 பகுதிகளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை 36 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறது காவல்துறை.
ஒரே நாளில் 5 செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 36 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்

கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் சென்னையில் மயிலாப்பூர், கோட்டூர்புரம் உட்பட 5 பகுதிகளில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை 36 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறது காவல்துறை.

சென்னை மாநகர் முழுவதும் பல இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டுகள்.

சென்னையில் பெண்களிடம் தொடர்ந்து தங்கச் சங்கிலி பறிக்கும் நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் கடந்த ஞாயிறன்று இரண்டு பேர், பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து, தீவிர விசாரணையில் குற்றவாளிகளின் அடையாளம் காணப்பட்டது. புகார் வந்து 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கச் சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சுதாதேவி (57). 
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் இவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், சுதாதேவி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதுகுறித்து சுதாதேவி, ஜஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கோட்டூர்புரம்: கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (37). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், செல்வி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
ஆனால் செல்வி, தங்கச் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டாராம். 
இதனால் அந்த நபர்களால், தங்கச் சங்கிலியை பறிக்க முடியவில்லை. இதன் விளைவாக ஆத்திரமடைந்த அந்த நபர்கள், செல்வியை தாக்கினர். மேலும் அந்த நபர்கள், செல்வியை காலால் உதைத்து தள்ளினர்.

இதற்கிடையே செல்வியின் அலறல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதைப் பார்த்த அந்த நபர்கள், அங்கிருந்து தப்பியோடினர்.

மயிலாப்பூர்: மயிலாப்பூர் ராமகிருஷ்ணா 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சாந்தா (60). இவர் மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த இரு நபர்கள், சாந்தாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இதேபோல, பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் இந்திராநகரைச் சேர்ந்தவர் பாலம்மாள் (69). இவர் தனது வீட்டின் அருகே நடந்து செல்லும்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் பாலம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

இதேபோல ஆதம்பாக்கம், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் இரு பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு நடைபெற்றிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இந்த 7 செயின் பறிப்பில் 5 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கொள்ளையர்கள்தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com