தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

தண்ணீர்ப் பிரச்னையைத் தமிழக அரசு தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


தண்ணீர்ப் பிரச்னையைத் தமிழக அரசு தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திங்கள்கிழமை மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசியது:
தண்ணீர் எங்கே? என்று கேட்கக்கூடிய குரலாக தமிழகத்தின் நிலை மாறியுள்ளது. ஆனால், கோட்டையில் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு இது கேட்கவே இல்லை.
தண்ணீருக்காக அமைச்சர்கள் எல்லோரும் யாகங்கள் நடத்துகின்றனர்.
கடந்த ஓராண்டு காலத்துக்கு முன்பே சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளெல்லாம் வற்றிக்கொண்டே வந்தது. இந்த நிலை நீடித்தால் பஞ்சம் வரும் என்று சட்டப்பேரவையில் ஏற்கெனவே ஆதாரங்களோடு கூறினேன். ஆனால், அதற்கு முறையான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதனால், இன்றைக்கு அவர்கள் யாகம் நடத்துவது குடிநீருக்காக அல்ல. பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆட்சி கவிழும்: ஜூன் 28-ஆம் தேதி சட்டப்பேரவை கூடப் போகிறது. பேரவைத் தலைவர் மீது ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளோம். அது எந்த மாதிரி அமையப் போகிறது எனத் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரையில் பேரவைத் தலைவரை நீக்குவதைவிட முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியைத்தான் முதலில் நீக்க வேண்டும். அந்த நிலை விரைவில் வரத்தான் சட்டப்பேரவைக் கூடுகிறது. அடுத்த தேர்தல் வந்துதான் இந்த ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
தேர்தல் வராமலேயே இந்த ஆட்சி மாற்றம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.  எப்படி இதை சொல்லுகிறீர்கள் என்று யாரும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடக்கத்தான் போகிறது. அதனால், இந்த ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்பொழுது அமைச்சர்கள் எல்லோரும் புடைசூழ ஆங்காங்கே மழைக்காக யாகத்தை நடத்துகின்றனர்.
ஏரிகள் எப்பொழுது வற்றிப் போயிருக்கிறது என்ற நிலை வந்ததோ, அப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு மெகா குடிநீர் திட்டத்தைக்கூட கொண்டுவரவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடல்நீரைக் குடிநீராக்குவதற்காக நான்கு திட்டங்களை அறிவித்தார். இதில், ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீரைச் சென்னைக்கு கொண்டு வரப்போகிறோம் என்று ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதுதான் நியாயம். அதை மறுக்கவில்லை. ஆனால், ஒன்றைச் சிந்தித்து பார்க்க வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து அந்த தண்ணீர் எப்படி வரப்போகின்றது என்று சொன்னால், அதனை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகத்தான் கொண்டு வரப் போகின்றனர்.
அந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது திமுக ஆட்சிதான். 
எனவே, தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கக்கூடிய இந்த ஆட்சியைத் தூக்கி எறிவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் இந்த குடிநீர் பஞ்சத்துக்கு ஒரு நல்ல முயற்சி எடுத்து, அதற்கு ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரவில்லை என்றால், தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா சிறைச்சாலைகளையும் நிரப்பக்கூடிய அளவுக்கு திமுக சார்பில் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
போராட்டத்தில் பங்கேற்றோர் அனைவரும், குடம் இங்கே, குடிநீர் எங்கே என்ற வாசகத்துடன் கூடிய காலிக்குடங்களைக் கையில் வைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com