மன்னார்குடி- ஜோத்பூர் விரைவு ரயில் சேவை: மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் தொடக்கம்

மன்னார்குடியிலிருந்து ஜோத்பூர் செல்லும் பகத் கி கோதி வாராந்திர விரைவு ரயில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு திங்கள்கிழமை ரயில் சேவை தொடங்கியது. 


மன்னார்குடியிலிருந்து ஜோத்பூர் செல்லும் பகத் கி கோதி வாராந்திர விரைவு ரயில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு திங்கள்கிழமை ரயில் சேவை தொடங்கியது. 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு பகத் கி கோதி எனும் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த ரயில் மன்னார்குடி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நண்பகல் 12. 25 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு ஜோத்பூர் சென்றடைகிறது. இதே போல் மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஜோத்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மன்னார்குடி வந்து சேருகிறது. இந்திய அளவில் ரயில் பெட்டிகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 400 கோடி மதிப்பில் ரயில்வே வாரியம் உத்க்ரிஷ்ட் (சிறந்ததில் எல்லாம் சிறந்தது) திட்டத்தின்கீழ் மொத்தம் 640 ரயில் பெட்டிகள் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த புதிய திட்டத்துக்கான ரயில் பெட்டிகள் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலைகளில்  தயாரிக்கப்படுகின்றன. 
மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட ரயில் சேவை கடந்த ஆண்டு காந்திஜியின் பிறந்தநாளையொட்டி, ராஜதானி, சதாப்தி ஆகிய முன்பதிவு வசதி மட்டும் உள்ள 7 ரயில்களில் இணைக்கப்பட்டு ரயில் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தின் 2-ஆம் கட்டமாக தொலைதூரம் செல்லும் வாராந்திர விரைவு ரயில்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டதையடுத்து, மன்னார்குடி - ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயிலில் உள்ள 18 பெட்டிகள் நவீன வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் சேவை, திங்கள்கிழமை தொடங்கியது. 
இதில், பெட்டிகள் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும், ஜிபிஎஸ் வசதிகொண்ட வருகைப் பதிவேடு, குப்பைத் தொட்டி கழிப்பறையிலும், ரயில் பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும். துப்புரவுப் பணியாளர் ரயிலில் பயணிப்பார், தேவைப்படும்போது தூய்மைப் பணியில் ஈடுபடுவார். பிளாஸ்டிக் தரை தளம், இருக்கைகளில் கூடுதல் குஷன், பெட்டியின் சுவர்களில் வண்ணப்படம் ஒட்டப்பட்டிருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் புதிய கார்ட்டன், எல்இடி விளக்கு வசதி, பயோ கழிப்பறை வசதி, தீயணைப்பு சாதனங்கள் ஆகிய ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு தர நிலைகளின்படி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ரயில் பெட்டியில் இடம்பெற்றிருக்கும்.
மன்னார்குடி ரயில்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்சி ரயில்வே கோட்ட சுற்றுச்சூழல் மற்றும் பராமரிப்பு மேலாளர் அனில் குமார் சிசோடியா தலைமை வகித்தார். மன்னார்குடி நிலைய மேலாளர் மனோகரன் கொடியசைத்து ரயில்  சேவையை தொடங்கி வைத்தார். இதில், தஞ்சை பகுதி மெக்கானிக்கல் பிரிவு பொறியாளர் மணிவண்ணன், தண்டவாள பராமரிப்பு பொறியாளர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com