சுடச்சுட

  
  jayakumar


  அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசு என்று திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கூறினார். அதற்கு, ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
  தயாநிதி மாறன்: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் இது தொடர்பாக பேசியதாவது:  பாஜகவை மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் ஏன் நிராகரித்தார்கள் என்பதை அந்தக் கட்சி ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்.  தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது, தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், குடிநீர்த் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால், இதுபோன்ற தண்ணீர்ப் பிரச்னை தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. தற்போது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, ஊழல் மிகுந்த அரசு என்றார் தயாநிதி மாறன்.
  அதிமுக, பாஜக எதிர்ப்பு: இதற்கு, அவையில் இருந்த தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திரநாத் குமார் எழுந்து தயாநிதி மாறன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதேபோல, வேறு சில பாஜக உறுப்பினர்களும் ஊழல் மிகுந்த அரசு என்று தயாநிதி மாறன் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
  அமைச்சர் ஜெயக்குமார்: இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
  ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சிக்கு தலைமை வகித்த, திமுக, தங்களது ஆட்சியைக் குறை சொல்லக் கூடாது. அதிமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, நாடாளுமன்ற மரபுகளை மீறி உறுப்பினர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் தயாநிதி மாறன்.
  ஊழலுக்காக...முதல்வராக இருந்த கருணாநிதி பழைய வீராணம் திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டார். பூச்சி மருந்து ஊழல், விவசாய இடுபொருள்கள் வாங்கியதில் ஊழல், சர்க்கரை, அரிசி கொள்முதலில் ஊழல் என ஊழலின் மொத்த உருவம் திமுக. 
  இந்த ஊழல்களை விசாரிப்பதற்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, அது ஊழல்களை உறுதிப்படுத்தியது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai