சுடச்சுட

  

  தொடங்கியது சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு: முதல் மாணவர் இசிஇ பிரிவை தேர்வு செய்தார்

  By DIN  |   Published on : 26th June 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  be


  சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
  கலந்தாய்வைத் தொடங்கி வைத்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இடங்களைத் தேர்வு செய்த முதல் 5 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக் கடிதத்தை வழங்கினார்.
   மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 194 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்த மாணவர் பரத், அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவைத் தேர்வு செய்தார்.
   தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில்  இந்த  கல்வியாண்டுக்கான (2019-20) பொறியியல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் மூன்று நாள்கள் நடத்தப்படும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 
  அதன் பின்னர் ஜூலை 3-ஆம் தேதி முதல் நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இந்த நிலையில், தரமணி மத்திய பாலிடெக்னிக்கில் கலந்தாய்வின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, விண்ணப்பித்திருந்த 143 பேரும் அழைக்கப்பட்டனர்.
  இவர்களில் 194 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்த மாணவர் பரத், கிண்டி பொறியியல் கல்லூரியில் இசிஇ பிரிவைத் தேர்வு செய்தார். கலந்தாய்வில் முதல் 5 இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
  நிகழாண்டில் தமிழகத்தில் 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 15 பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதன் காரணமாக, பொறியியல் படிப்புகளில் சேர்க்கை குறைந்திருக்கிறது. இருந்தபோதும், 1 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துவிடுகின்றனர் என்றார் அவர்.
  முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 950 பேருக்கு அழைப்பு: கலந்தாய்வின் இரண்டாம் நாளான புதன்கிழமை முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 950 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 1,650 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
  மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு: 6,814 இடங்கள் நிரம்பவில்லை
  பொறியியல் கலந்தாய்வின் முதல் நாளில் 101 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றுள்ளனர். எனினும், போதிய மாணவர்கள் கலந்துகொள்ளாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான 6,814 பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாகியுள்ளன.
   இந்த கல்வியாண்டு (2019-2020) பொறியியல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க 143 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 101 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 10 பேர், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
  அழைக்கப்பட்டவர்களில் 32 மாற்றுத்திறனாளிகள், கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.  இதன் காரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட 6,915 இடங்களில் 6,814 இடங்கள் சேர்க்கையின்றி காலியாகியுள்ளன.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai