சுடச்சுட

  

  மருத்துவப் படிப்பு: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு

  By DIN  |   Published on : 26th June 2019 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் விண்ணப்பங்களை தொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
   நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,350 எம்பிபிஎஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.
  அவற்றில் 15 சதவீதம் (503 எம்பிபிஎஸ் இடங்கள், 15 பிடிஎஸ் இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) இந்த மாத இறுதியில் நடத்துவதாக அறிவித்தது.
  அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த வாரம் தொடங்கியது. திங்கள்கிழமையுடன் (ஜூன் 24) விண்ணப்பப் பதிவு நிறைவடையும் என்றும், அதன் பின்னர் விருப்பமான கல்லூரிகளை ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அவகாசங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திடீரென செவ்வாய்க்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை மருத்துவ கவுன்சில் குழு (எம்எம்சி) வெளியிட்டது.
  தில்லியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை விண்ணப்பப் பதிவை நீட்டிப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mcc.nic.in என்ற இணையதளத்தை அணுகுமாறு எம்சிசி அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்றங்களின் காரணமாக திட்டமிட்டபடி முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai