சுடச்சுட

  

  ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைப் பேச்சு: இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன்

  By DIN  |   Published on : 26th June 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ranjith


  ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய  வகையில் பேசியது தொடர்பான வழக்கில் இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் பகுதியில் கடந்த 5 ,ஆம் தேதி  நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார்.  அதில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துகளை அவர் பேசியதாக கூறப்படுறது. இது தொடர்பாக திருப்பனந்தாள் போலீஸார் ஜூன் 11 ,ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
  இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி?, நிலமற்ற மக்கள், குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் செந்தமிழ் நாட்டு சேரிகள் எனும் புத்தகத்தில் ராஜராஜ சோழன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதையே பேசினேன். முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசியுள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
  இந்த மனுவை முன்பே விசாரித்த நீதிபதிகள், முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கு,  நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பா.ரஞ்சித் பேசியது தொடர்பாக எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத நிலையில், 11-ஆம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் முன்  ஜாமீன் வழங்க வேண்டுமெனக் கோரினார். 
  அப்போது பா.ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனும் நோக்கில் வழக்கில்  முத்துக்குமார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சட்ட ஒழுங்கு பிரச்னை, சாதிய, மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பலரும் பேசுவது அதிகரித்து வருகிறது. இந்த வழக்கில் பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கினால்,  அவரை போன்று பலரும் பேசத் தொடங்குவர். ஆகவே, முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது என பா. ரஞ்சித்தை எச்சரித்தார். அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இனி வரும் காலங்களில் இது போன்று பேசினால், முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடர்புடைய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai