ஜூலை 4-இல் சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: தமிழகம் சார்பில் 25 பேர் பங்கேற்க முடிவு

 பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் சிகாகோ நகரில் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள்,  அரசு அலுவலர்கள் உள்பட 25 பேர் பங்கேற்கவுள்ளனர்
ஜூலை 4-இல் சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: தமிழகம் சார்பில் 25 பேர் பங்கேற்க முடிவு


 பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் சிகாகோ நகரில் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள்,  அரசு அலுவலர்கள் உள்பட 25 பேர் பங்கேற்கவுள்ளனர். 
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (ஐஏடிஆர்),  வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (ஃபெட்னா), சிகாகோ தமிழ்ச் சங்கம் (சிடிஎஸ்) ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன்,  மாநாட்டின் துணைத் தலைவர் பொன்ன வைக்கோ,  விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம்,  வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதைத் தொடர்ந்து மாநாடு குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:  எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.  உலகெங்கிலும் 136 நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ் மொழிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.  தமிழினம்,  தமிழ்மொழி,  இலக்கியம்,  பண்பாடு,  நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை,  தற்கால இலக்கியம் ஆகியன குறித்துப் புதுவரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும் ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தலே மாநாட்டின் மையப் பொருளாகும். சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள், நவீன இலக்கியம் போன்ற எட்டு தலைப்புகளில் உலகெங்கிலும் இருந்து ஆய்வுக் கட்டுரைகளுக்கான சுருக்கங்களைக் கேட்டிருந்தோம். மாநாட்டின் ஆய்வுக்குழு 1,150 கட்டுரைச் சுருக்கங்களை ஆராய்ந்து அதிலிருந்து மிகச் சிறப்பான 80 கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்து மாநாட்டில் உலகப் பேரறிஞர்கள் முன்னிலையில் வழங்கவுள்ளது.  
என்னென்ன நிகழ்ச்சிகள்?: இந்த மாநாட்டில் தமிழ்ச் சொற்கள் அனைத்தையும் தொகுத்து வரிசைப்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைகளைப் பதிவு செய்தல் உள்ளிட்டவை அடங்கிய சொற்குவை திட்டம் எனும் பெயரில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இணையதளம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  மேலும் மாநாட்டில் ஈழத்தில் நடனமும் பாரம்பரியமும், மாவீரன் இராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும் இந்த விழாவில் அரங்கேற்றப்படுகின்றன. 
 ஜூலை 4 -ஆம் தேதி  இளைஞர் போட்டிகள்,  குறும்படப் போட்டிகள்,  கங்கை கொண்ட சோழன்: இராசேந்திர சோழன்- நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  இதையடுத்து ஜூலை 5-ஆம் தேதி தமிழ் இசை,  கவியரங்கம், இலக்கிய விநாடி வினா,  தமிழ்ச் சங்கங்களின் அணி வகுப்பு ஆகிய நிகழ்ச்சிகளும் அன்றைய தினம் மாலை பத்தாவது உலகத் தமிழ் மாநாடு தொடக்க விழாவும் நடைபெறவுள்ளன. இதில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 50-ஆவது திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது.  
வணிக,  பொருளாதார மாநாடு:  இதையடுத்து இயற்கையில் பிறந்த தமிழ்- இசைப்பெரும் நாட்டிய நாடகம் நடைபெறும்.  ஜூலை 6-ஆம் தேதி உலகத் தமிழர்கள் பங்கேற்கும் வணிக,  பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது.  தமிழரின் பெருமையை உலகளவில் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த மாநாடு இருக்கும்.  ஜூலை 6 மற்றும் 7-ஆம் தேதி மாநாட்டின் இரு அமர்வுகள் நடைபெறும்.  இந்த மாநாட்டுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழறிஞர்கள்,  அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 25 பிரதிநிதிகளையும் அனுப்பி வைக்கவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுமார் 6 ஆயிரம்பேர் பங்கேற்க உள்ளனர். 
தமிழகத்தில் இருந்து செல்லும் ஆய்வாளர்கள் சிலருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வாளர்களை தமிழக அரசானது சிறப்பு அனுமதி மூலம் அழைத்துச் செல்லும் என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com