தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன்

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்
தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன்


சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கட்சி நிர்வாகி ஒருவரிடம் ஆட்சேபகரமான முறையில் கருத்துகளைத் தெரிவித்தார். இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் சார்ந்துள்ள தேனி மாவட்டத்தின் அமமுக நிர்வாகிகளுடன் சென்னையில் டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியது:
சென்னையில் எனது இல்லத்தில் நடந்தது அவசர ஆலோசனை இல்லை. ஏற்கெனவே திட்டமிட்ட கூட்டம்தான். தேனி மாவட்ட நிர்வாகிகள் வந்து ஆலோசனை நடத்தினர். கடந்த வாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பண்பலை வானொலியில் பேட்டி அளித்தார். அதில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் தெரிவித்ததால், அதுகுறித்து நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை அழைத்து விசாரித்தேன்.
வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது எனக் கூறினேன். அவரும் அந்தப் பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்தார். தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும், இல்லாவிட்டால் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலும், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் வேறொருவர் நியமிக்கப்படுவார் என எச்சரித்தேன்.
கட்சிப் பதிவு: அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு  தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவிப்போம் எனவும், நீக்கல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என்பதற்காகவும் காத்திருந்தோம். அதே நேரத்தில், யாரையும் நீக்க அச்சமோ, பயமோ கிடையாது.
ஜூலை முதல் வாரத்தில் கட்சி நிர்வாகிகளின் நியமனம் அறிவிக்கப்படும். கட்சி நிர்வாகியிடம் தொலைபேசியில் பேசும் போது, தான் விஸ்வரூபம் எடுப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். அவர் எனது உதவியாளரிடம் பேசவில்லை. கட்சியின் நிர்வாகியான மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டியனிடம் பேசியுள்ளார். 
இனிமேல் விளக்கம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவரிடம் இனிமேல் விளக்கம் கேட்க மாட்டேன். கட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முதலாக நீக்கல் அறிவிப்பு வேண்டாம் என்பதற்காகவே  காத்திருக்கிறேன். அந்தப் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டாலே பழைய நபர் நீக்கப்பட்டதாகவே அர்த்தம்.
தங்க தமிழ்ச்செல்வன் எப்போதும் என்னிடம் நேராக எதையும் சொல்ல மாட்டார். வாய்க்கு வந்ததைப் பேசுவார். அவரை தொடர்ந்து எச்சரித்தே வந்துள்ளேன். யாரோ அவருக்கு அறிவுறுத்தல்களை வழங்குகிறார்கள். அதன்படி அவர் செயல்படுகிறார். முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுக்கச் சொன்னது தங்க தமிழ்ச்செல்வன்தான். இதை சக எம்எல்ஏக்களிடமே கேட்டுப் பாருங்கள். பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன். எங்களது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர் பேரவைத் தலைவர். அவருக்கு எதிர்ப்பாகத்தான் வாக்களிப்போம் என்றார் டிடிவி தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com