புதிய தலைமைச் செயலாளர் யார்?: ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ள ஆர்.ராஜகோபால், கே.சண்முகம் ஆகிய இருவரில்
புதிய தலைமைச் செயலாளர் யார்?: ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ள ஆர்.ராஜகோபால், கே.சண்முகம் ஆகிய இருவரில் ஒருவர் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
 தமிழகத்தின் 45-ஆவது தலைமைச் செயலாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 22-இல் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார். மாநிலத்தின் கடுமையான அரசியல் சிக்கல்களுக்கு இடையே அவர் அரசு நிர்வாகத்தைக் கொண்டு சென்றார். முதல்வர் மாற்றம், சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என அண்மைக் காலங்களில் தமிழகம் சந்திக்காத பல்வேறு அரசியல் ரீதியான சிக்கல்களை 2017-ஆம் ஆண்டு சந்தித்தது. சிக்கலான காலகட்டங்களில் பணியாற்றி கிரிஜா வைத்தியநாதன் வரும் 30-ஆம் தேதியுடன் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.


புதிய செயலாளர் யார்?: தமிழகத்தின் 46-ஆவது தலைமைச் செயலாளர் யார் என்பதே அரசு வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிலேயே மிக மூத்த அதிகாரியாக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனுக்குப் பிறகு அடுத்த இடத்தில் இருப்பவர் ஆளுநர் மாளிகையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால்.
இதேபோன்று கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் பட்டியலில் ஏழாவது இடத்திலும், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருப்பவர் கே.சண்முகம். இதுதவிர உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட வேறு சில அதிகாரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இருப்பினும் ஆர். ராஜகோபால், கே. சண்முகம்  ஆகியோரில் ஒருவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான உத்தரவு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com