மதுரையை மிரட்டும் "ஷேர் ஆட்டோ' க்கள்!

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் "ஷேர்' ஆட்டோக்கள் இயக்குவதை முறைப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
மதுரையை மிரட்டும் "ஷேர் ஆட்டோ' க்கள்!

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் "ஷேர்' ஆட்டோக்கள் இயக்குவதை முறைப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழகத்தில் இரு சக்கர வாகனத்துக்கு அடுத்தபடியாக  சுமார் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.  இதில் "ஷேர்' ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுப் பேருந்தை காட்டிலும் கட்டணம் குறைவாகவும், உடனுக்கு உடன் செல்ல வாய்ப்புள்ளதாலும் பொதுமக்கள் பெரிதும் இவற்றையே விரும்புகின்றனர். தொழில், கல்வி என பலர் பயணிப்பதால் விரும்பும் இடத்தில் ஏறவும், இறங்கவும் முடிவதால் நகர மக்களின் வாழ்வில் இவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. இத்தனை வசதிகளை கொண்ட "ஷேர்'  ஆட்டோக்கள் "கோயில் நகரம்' என்ற புகழ் பெற்ற மதுரையில், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், போலீஸாருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. 
மதுரை மாநகரில் அண்மை காலமாக "ஷேர்'  ஆட்டோக்களின் விதிமீறல்களால் போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள், தகராறு காரணமாக வழக்குகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
மதுரை மாநகரில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  "ஷேர்'  ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் 10-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்கின்றனர். இதற்காக போட்டி போட்டுக் கொண்டும், அதிவேகமாகவும், நினைத்த இடத்தில் தாறுமாறாக நிறுத்துவதாலும் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இவற்றால் போக்குவரத்து நெரிசல், போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நிறுத்ததில் 5-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்திக் கொண்டு பயணிகளுக்கும், மற்ற வாகனங்களுக்கும் வழிவிடாமல் இடையூறு செய்வதால், பேருந்துகளை நிறுத்த முடியாமல் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.
இதற்காக, பேருந்துகள் சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால், குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளான மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் பகுதிகளில் "ஷேர்'  ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால் அப்பகுதியே ஆட்டோக்கள் நிறுத்தும் இடங்களைப் போல மாறியுள்ளது.  இதனால் ஏற்படும் வாகன நெரிசலை போக்குவரத்து போலீஸாரும் கண்டுகொள்வதில்லை என மற்ற வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
இவற்றை  மற்ற வாகன ஓட்டிகள் கண்டிக்கும் போது அவை கைகலப்பில் முடிகின்றன.மேலும், "ஷேர்'  ஆட்டோக்களை இயக்குபவர்கள்  பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்வது கிடையாது என்றக் குற்றச்சாட்டும் உள்ளது. 
மதுரை நகரில் "ஷேர்'  ஆட்டோக்களால் நிகழும் விபத்துகளை தடுக்க பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். அதில், வாகனத்தின் முன்புறம், பின்புறம் வண்ண சர விளக்குகளை பயன்படுத்தக் கூடாது, ஓட்டுநர், பயணிகள் இருக்கை மாற்றும்படியாக இருக்கக் கூடாது, பயணிகளுக்கு தெரியும் வகையில் இலவச புகார் எண், ஆட்டோ ஓட்டுநர் குறித்த விவரங்களை வைத்திருக்க வேண்டும். மீட்டர் இன்றி ஓட்டக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஆள்களை ஏற்றக் கூடாது. ஓட்டுநர் இருக்கையின் வலது, இடதுபுறங்களில் பயணிகள், சரக்குகளை ஏற்றக் கூடாது. சீருடை அணிந்து ஓட்ட வேண்டும். பீடி, சிகரெட் புகைத்துக் கொண்டோ, மது அருந்தியோ, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டோ ஆட்டோ ஓட்டக் கூடாது. வேகமாக இயக்கக் கூடாது. நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
ஆனால், காவல் துறையினர் எதை செய்யக் கூடாது என்றார்களோ, அதை மட்டும்தான் "ஷேர்'  ஆட்டோக்கள் பின்பற்றி வருகின்றன. இந்த விதிமீறல்கள் குறித்து போக்குவரத்து அதிகாரிகளும், போக்குவரத்து காவல் துறையினரும் பெரிதும் கண்டு கொள்வதே இல்லை. இதையெல்லாம் கடந்து நடவடிக்கை பெரிதாக இருந்தால் "ஷேர்'  ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் மூலம் போராட்டங்களை தொடங்குகின்றனர். இதனால் காவல் துறைக்கும், அரசுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 "ஷேர்' ஆட்டோக்கள் விவகாரத்தில் எந்த தீர்வும் காண முடியாமல் அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே,இவ் விவகாரத்தில் உரிய நடவடிக்கை உடனடி தேவை என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள்மதுரை மாநகர் காவல்துறை துணை ஆணையர்(போக்குவரத்து) அருணகோபாலன் கூறியது: ஆட்டோக்கள் வீதிமீறல் குறித்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆட்டோக்கள் விவகாரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பொதுமக்கள், பயணிகள் மத்தியில் எதிர்ப்பு அதிகம் இல்லாததால், அதில் ஆர்வம் காட்ட முடியவில்லை. ஆட்டோக்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் ஏற்றினாலோ, அதன் இருக்கையை மாற்றி அமைத்தாலோ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com