மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்

மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்

மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று உறுதியான உத்தரவை பிறப்பிக்காமல், மழை பெய்தால் தண்ணீர் விடுங்கள் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடுமையான கண்டனத்திற்குரியது. தில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகத்தின் குரல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு’ என்று மேலோட்டமாக இது பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், காவிரி ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக இருக்கும் திரு.மசூத் ஹூசைன் அளித்த பேட்டி அதனைப் பொய்யாக்கி இருக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தி, தமிழகத்திற்குரிய பங்கு தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய காவிரி ஆணையத்தின் தலைவர் கர்நாடகத்தின் வழக்கறிஞராக மாறி செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மழை பெய்தால் போதுமான தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு மேலாண்மை ஆணையம் எதற்கு? காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது, கர்நாடகா போனால் போகிறது என்று வழங்கும் தானம் அல்ல; தமிழகத்தின் உரிமை என அவருக்குத் தெரியாதா? வறட்சி கால நீர்ப்பகிர்வு முறையைச் செயல்படுத்த காவிரி ஆணையம் ஏன் முன் வரவில்லை? தமிழகத்தை இப்படி மாற்றாந்தாய் பிள்ளையைப் போல நடத்துவது எப்படி சரியாகஇருக்க முடியும்?

இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய் மேக்கேதாட்டூ அணை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குச் சரியாக பதிலளிக்காமல், ‘அதெல்லாம் உடனே நடந்துவிடக்கூடியதல்ல’ என்று மழுப்பலாக மசூத் ஹூசைன் கூறியிருக்கிறார். ஏனெனில் இதே மசூத் ஹூசைன் தான் மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்தவர். மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் அவர், ஆரம்பம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. அவருடைய பேட்டி அந்தச் சார்பு நிலையை நிரூபிப்பதாகவே உள்ளது. எனவே, இதற்கு மேலும் வேடிக்கை பார்க்காமல், சட்ட ரீதியாக செயல்பட்டு உச்சநீதிமன்றத்தின் வழியாக காவிரி நீரைப் பெறுவதற்கு பழனிச்சாமி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை வலிமையாக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். முதலில் கூடுதல் பொறுப்பாக ஆணைய தலைவர் பதவியில் இருக்கும் மசூத் ஹூசைனை மாற்றிவிட்டு, முழ நேர தலைவர் ஒருவரை நியமிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். தங்களது கூட்டணி கட்சியான காங்கிரசின் ஆதரவு பெற்ற கர்நாடக அரசு மேற்கொள்ளும் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையுடன் பேச வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com