சென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்!

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி சென்னை, முன்னணியில் இருந்தாலும் கூட, அதனால் தமிழர்கள் பெரிய அளவில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.
சென்னை ஐஐடியில் எத்தனை தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள்!


சென்னை: இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி சென்னை, முன்னணியில் இருந்தாலும் கூட, அதனால் தமிழர்கள் பெரிய அளவில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.

ஏன் என்றால், ஐஐடி சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் பி.டெக் -எம் டெக் (இரட்டை பட்டப்படிப்பு) அல்லது எம்.டெக் பயிலும் மாணவர்களில் 20 சதவீதம் பேர் கூட தமிழர்கள் இல்லை என்பதே.

மீதமிருக்கும் அனைத்து மாணவர் சேர்க்கை இடங்களும் பெரும்பாலும் ஆந்திரா, தெலங்கானா மாநில மாணவர்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இ. முரளிதரன் எழுப்பியிருந்த கேள்விக்கு விடையாகக் கிடைத்துள்ளது.

அதாவது பி.டெக். பாடப்பிரிவில் வெறும் 16% தமிழக மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதே சமயம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 40% மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர். 

இதேப்போல, பி.டெக்-எம்.டெக் (இரட்டைப் பட்டம்) பாடப்பிரிவில் 30 சதவீதமும், எம்.டெக் பாடப்பிரிவில் 25 சதவீதமும் ஆந்திரா மற்றும் தெலங்கான மாநில மாணவர்களே சேர்ந்துள்ளதாகவும், அதிலும் கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக 18 சதவீத தமிழக மாணவர்களே சேர்க்கை பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் பிற ஐஐடி நிறுவனங்களிலும் கூட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் இடம் பெறுகிறார்கள். இது குறித்து சரியான புள்ளி விவரம் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் நான் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளேன். ஒவ்வொரு ஐஐடியின் மாணவர் சேர்க்கை விகிதத்தையும் தனித்தனியாகக் கோரியுள்ளேன் என்கிறார் முரளிதரன்.

எனவே, ஒவ்வொரு ஐஐடியும் அமைந்திருக்கும் மாநிலங்களின் மாணவர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட சதவீத மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். முன்பு இந்தியாவில் வெறும் 5 ஐஐடிக்கள்தான் இருந்தன. தற்போது 23 ஐஐடிக்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மாநிலத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. எனவே, ஐஐடி அமைந்திருக்கும் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முரளிதரன் வலியுறுத்துகிறார்.

ஏராளமான மக்களின் வரிப்பணத்தில்தான் ஐஐடிக்கள் நிறுவனப்படுகின்றன. எனவே, ஒரு மாநிலத்தில் அமையும் ஐஐடியில், அந்த மாநில மாணவர்கள் பயன்பெறுவது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா கூறுகையில், மண்டல பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையில் பயன்படுத்திய நடைமுறையை ஐஐடிக்கள் பின்பற்ற வேண்டும். 2002ம் ஆண்டுக்குப் பிறகு அனைத்து மண்டல பொறியியல் கல்லூரிகளும், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியோடு செயல்படும் வரை 50 சதவீத மாணவர் சேர்க்கையை கல்லூரி அமைந்திருக்கும் மாநில மாணவர்களுக்காக ஒதுக்கியிருந்தது. எப்போது மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படும் என்ஐடியாக மாறியதோ அதுமுதல் இந்த நடைமுறை கைவிடப்பட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com