ஏரி-குளங்களை தூர்வார தனியாருக்கு தடையில்லை: மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி அளிக்க முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஏரி-குளங்களை தனியார் தூர்வார எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் நீர்வள ஆதாரத்துறை பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் நீர்வள ஆதாரத்துறை பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.


தமிழகத்தில் உள்ள ஏரி-குளங்களை தனியார் தூர்வார எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மாவட்ட நிர்வாகங்களிடம் முன் அனுமதி பெற்று அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
பொதுப்பணித் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக, அந்தத் துறையின் அதிகாரிகள், பொறியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் தொடக்கமாக அவர் ஆற்றிய உரை:
தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் தன்னிச்சையாக ஏரிகள், குட்டைகளை தூர்வார அனுமதி வழங்கப்படவில்லை என்ற செய்திகள் தவறானவை. இதற்கான தெளிவான உத்தரவை வழங்கியுள்ளோம்.
பொது மக்களோ, தொண்டு நிறுவனங்களோ, தனியார் அமைப்புகளோ ஏரிகள், குளங்களை தூர்வார முன்வந்தால் அதற்குரிய அனுமதியை மாவட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும். அப்படி முன்வருவோருக்கு உரிய அனுமதிகளை அளிக்க அரசு தயாராக உள்ளது. இதற்கான உத்தரவுகளை ஆட்சியர்களுக்கு பிறப்பித்துள்ளோம்.
தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விவசாயிகள் ஏரிகள்,  குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அள்ளிக் கொள்ளலாம். தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையும் தூர்வாரப்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தவிர அணையின் பிற பகுதிகளில் உள்ள வண்டல் மண்ணை அள்ளிக் கொள்ளலாம். தூர்வாரப்படும் போது எடுக்கப்படும் வண்டல் மண்ணை நிலத்தின் தன்மைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம். நன்செய் நிலமாக இருந்தால் 25 யூனிட்களும், புன்செய் நிலமாக இருந்தால் 30 யூனிட் மண்ணையும் எடுத்துக் கொள்ளலாம். மண்பாண்டத் தொழிலாளர்களைப் பொருத்தவரை 10 முதல் 20 யூனிட்கள் வரை மணலை அள்ளிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
ஏரிகள் புனரமைப்பு: 18 மாவட்டங்களில் 907 ஏரிகளையும், 108 அணைக்கட்டுகளையும் புனரமைக்க நிகழாண்டில் அரசு நடவடிக்கை எடுக்கும்.  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 56 பணிகள் துவங்கப்பட்டு 17 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு தடுப்பணைப் பணிகள் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மழைநீர் கடலில் கலப்பு: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைநீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்பதை கண்டறிய ஓய்வுபெற்ற பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது மழை நீர் வீணாகக் கலக்கும் பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பணைகளைக் கட்ட அரசுக்குப் பரிந்துரைக்கும். இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் தடுப்பணைகள் கட்டப்படும்.
கோதாவரி- காவிரி இணைப்பு: கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென பிரதமரை நேரில் சந்திக்கும் போது கோரிக்கை விடுத்தோம். மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடமும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறைவேற்ற குடியரசுத் தலைவர் உரையில் வலியுறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. இந்தக் கோரிக்கையை தமிழகத்தின் சார்பில் பிரதமரிடம் கேட்டுக் கொண்டோம் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com