
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.ஆர்யமாசுந்தரம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என நீரி என்னும் மத்திய அரசு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையை மூடும் போது துப்பாக்கிச்சூடு காரணமாகவே மூடப்படுவதாக தெரிவித்த தமிழக அரசு தற்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக மூடப்படுவதாக கூறியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது எங்கிருந்து 20 ஆயிரம் பேர் வந்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருப்பதோடு, சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சிபிஐ விசாரணையில் கூட வேதாந்தா நிறுவனத்துக்கு எந்தவொரு பங்கும் இல்லை. இப்படி எந்தத் தொடர்புமே இல்லாத ஆலையை மூடி அரசு தண்டனையை மட்டும் எங்களுக்குக் கொடுத்துள்ளது. ஆலை மூடியிருப்பதால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அமிலங்கள் வெளியேறி கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, தொழில் போட்டி காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் சதி உள்ளது. இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி செய்வதும் அந்த சீன நிறுவனம் தான் என குற்றம்சாட்டினார். மேலும் அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 28) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.