தீபாவளிக்கு ஊருக்குப் போகணுமா? விரைவு ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கையைப் பாருங்கள்!

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் நீண்டது. அதிகபட்சமாக, பாண்டியன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் காத்திரு
தீபாவளிக்கு ஊருக்குப் போகணுமா? விரைவு ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கையைப் பாருங்கள்!

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் நீண்டது. அதிகபட்சமாக, பாண்டியன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் 1,075 பேர் இருந்தனர். 

அதுபோல, நெல்லை, பொதிகை, சேரன் உள்பட முக்கிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியலும் நீண்டுள்ளது.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் தீபாவளியைக் கொண்டாட ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்னதாகவே, டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வது வழக்கம். ரயில்களில் 120 நாள்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. 

அந்த வகையில், தீபாவளி பண்டிகை கொண்டாட (ஒருநாள் முன்னதாக ஊருக்கு சென்று கொண்டாட) அக்டோபர் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்படுவதற்காக டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில்  டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி, ஒரு நிமிடம் முதல் 5 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. பாண்டியன், நெல்லை, பொதிகை, சேரன், மலைக்கோட்டை, முத்துநகர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் அடுத்தடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் ஒவ்வொரு வரிசையிலும் சராசரி 3 முதல் 5 நபர்களுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைத்தது. 

இனி முன்பதிவு செய்ய அனுமதி இல்லை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் டிக்கெட் முன்பதிவு ஒரு நிமிடத்தில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. வியாழக்கிழமை மாலை 4.35 மணி நிலவரப்படி, பாண்டின் விரைவு ரயிலில் 1,075 பேர்  காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். இனிமேல் பதிவு செய்ய அனுமதி இல்லை என்று காட்டியது. இதுபோல, 3-ஆம் வகுப்பு ஏசி பெட்டியிலும் டிக்கெட் முன்பதிவு  முடிந்து, 163 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். இதிலும், இனி முன்பதிவு செய்ய அனுமதி இல்லை என்று காட்டியது. 

இதற்கு அடுத்ததாக, சென்னை-திருநெல்வேலிக்கு இயக்கப்படும்  நெல்லை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் டிக்கெட் முன்பதிவு முடிந்து 943 பேரும், மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 144 பேரும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். 

பொதிகை ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 954:  சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்குப் புறப்படும் பொதிகை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலில்  954 பேர் இருந்தனர். 3-ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில்  டிக்கெட் முன்பதிவு முடிந்து, 146 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தனர். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் சேரன் விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில்  802 பேரும், 3-ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் 95 பேரும் காத்திருப்போர் பட்டியில் இருந்தனர். 

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்குப் புறப்படும்  மலைக்கோட்டை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில்  395 பேரும்,  மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் 73 பேரும் இருந்தனர். இதுபோல, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் 341 பேரும், மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 55 பேரும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். முத்துநகர், அனந்தபுரி, கன்னியாகுமரி,  மன்னார்குடி உள்பட பல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் 250-யை தாண்டி நீண்டது. இது தவிர, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்குப் புறப்படும் வைகை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு அமரும் இடங்களுக்கு  காத்திருப்போர் எண்ணிக்கை 176-ஆக இருந்தது. 

70 சதவீதம் ஆன்லைனில் பதிவு: இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: 
தீபாவளி டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியவுடன், பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் முன்பதிவு ஒரு நிமிடத்தில் முடிந்தது. அனந்தபுரி,  சேரன் ஆகிய விரைவு ரயில்களில் இரண்டு நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. மலைகோட்டை, நீலகிரி, முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களில் 3 நிமிடங்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. அடுத்தடுத்து சில நிமிடங்களில் மற்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.  டிக்கெட் முன்பதிவுவைப் பொருத்தவரை, 70 சதவீத டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com