தமிழகம் முழுவதும் 300 வட்டாட்சியர்கள் வெளிமாவட்டங்களுக்கு திடீர் இடமாற்றம்: வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம்

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றிய வட்டாட்சியர்கள் 300 பேர், வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வருவாய்த்துறையினரிடையே


மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றிய வட்டாட்சியர்கள் 300 பேர், வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வருவாய்த்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
 தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வட்டாட்சியர் நிலையில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குள் வேறுபணியிடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில்,  இம்முறை எப்போதும் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் 300 வட்டாட்சியர்கள்  வெளிமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
  மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) தான் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின்பேரில் மதுரையைச் சொந்த  மாவட்டமாகக் கொண்ட வட்டாட்சியர்கள் 10 பேர் தேனி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் பார்த்திபன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலர் பாண்டி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 பின்னர் பணிமறுப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். வெள்ளிக்கிழமையும் இப்போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர். அதன்பிறகும் நடவடிக்கை இல்லையெனில் வரும் திங்கள்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தனர்.
தேர்தல் பணிகள் பாதிக்கும்...: வட்டாட்சியர்கள் உதவித் தேர்தல் அலுவலர் நிலையில் இருப்பவர்கள். தேர்தலின்போது களப்பணிகள் அனைத்தும் இவர்களது தலைமையில் தான் நடைபெறும். அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும்போது,  பணிகளில் தொய்வு ஏற்படாது. அதேநேரம் வெளிமாவட்டங்களுக்கு திடீரென இடமாற்றம் செய்யும்போது, பல்வேறு நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலர் பார்த்திபன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com