ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவின் காரணமாக நோய் பரவுவதால், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உத்தரவின்பேரில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. மேலும் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதன்படி தருண்அகர்வால் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை 15 நாள்களுக்குள் திறக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.

தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே போன்று வேதாந்தா நிறுவனமும் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு இல்லை. இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு தவறானது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்களும் தமிழக அரசிடம் இல்லை. இந்த விவகாரத்தில் எங்களது நிறுவனத்துக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அனைத்து விதமான விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுகிறது.  எனவே, ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம், அரசுத் தரப்பு, உள்ளிட்ட தரப்பினரின் வாதத்தைக் கேட்ட பிறகு, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க இயலாது என்று நீதிமன்றம் மறுத்து விட்டது.      

அதேநேரம் வழக்கு குறித்து தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com