இந்தியாவில் ஜனநாயகத்தை பாஜக விரும்பவில்லை: திருமாவளவன்

ஜனநாயக இந்தியாவை பாஜக விரும்பாமல் சனாதன கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
இந்தியாவில் ஜனநாயகத்தை பாஜக விரும்பவில்லை: திருமாவளவன்

ஜனநாயக இந்தியாவை பாஜக விரும்பாமல் சனாதன கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

அகில இந்திய மக்கள் மேடை,  அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் ஆகியவை சார்பில் பாளையங்கோட்டை நேரு திடலில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற "தென்தமிழகம் காப்போம்' பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: மத்திய, மாநில அரசுகளின் கொள்கை நிலைப்பாடுகளால் பல நேரத்தில் மக்கள் ஆபத்தான நிலையை அடையும் சூழல் உள்ளது. அதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும். நாட்டின் வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்காகத்தான் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய திட்டங்களை வகுக்கிறோம் என்று மேலோட்டமாக ஒரு கவர்ச்சி முழக்கத்தை முன்வைக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணைபோகும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரள மாநிலத்தில் அணு உலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும், கட்சியினரும் இணைந்து போராடிய சூழலில் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கூடங்குளத்தில் அமைத்துள்ளனர். மின்சார உற்பத்திக்கு மாற்றுவழிகள் பல உள்ளன. காற்று, சூரியஒளி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்போது அதற்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்.  

ஆனால், அதை முறையாக செய்வதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் என்பதை பாஜக விரும்பவில்லை. சனாதன கொள்கைகளையே விரும்புகிறார்கள். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதும்,  அவர்களின் கருத்துகளையும்,  உணர்வுகளையும் மதிப்பதும்தான் ஜனநாயகம்.  அதை விடுத்து ஒரே தேசம் ஒரே கலாசாரம் என்று சொல்வது சனாதன மார்க்கமாகும் என்றார் அவர்.

பொதுக்கூட்டத்துக்கு சுப.உதயகுமாரன் தலைமை வகித்தார். வித்யாசாகர் வரவேற்றார். ஜி.ரமேஷ்,  இடிந்தகரை சேவியரம்மாள், சுந்தரி, கூடங்குளம் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.செரீப்,  தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். தீர்மானங்கள்: கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்கக் கூடாது; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கைத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; மணக்குடி சரக்குப் பெட்டக மாற்று துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய அம்சங்களை மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் கட்சிகள் சேர்க்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவானால் தெற்காசிய மக்களுக்கு பேராபத்து உருவாகும்.  ஆகவே, அமைதி உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக ஜனநாயக முறையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டிப்பது,  அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலனை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com