சின்னத்தம்பி யானையை கூண்டில் அடைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட உச்சநீதிமன்றம் உத்தரவு

சின்னத்தம்பி யானையை கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக, மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டது.
சின்னத்தம்பி யானையை கூண்டில் அடைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட உச்சநீதிமன்றம் உத்தரவு


சின்னத்தம்பி யானையை கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக, மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டது.
 இது தொடர்பாக பீப்பிள் ஃபார் கேட்டிள் இன் இந்தியா (பிஎஃப்சிஐ) அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 21-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முகாமில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி யானையை கூண்டில் அடைக்காமல் திறந்தவெளியில் வைத்திருக்க வேண்டும். அந்த யானையை சாதுவாக்குதல் என்ற பெயரில் சித்திரவதை செய்வதை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு, தமிழக அரசின் வனத் துறை தலைமைப் பாதுகாவலர், வனத்துறை கூடுதல் தலைமைப் பாதுகாவலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. பிஎஃப்சிஐ தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி, பிடிப்பட்ட யானையை கூண்டுக்குள் அடைத்து வைக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறதே என வினவியதுடன், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தனர்.
பின்னணி: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சின்னத்தம்பி யானை மூலம் பொதுமக்களுக்கு, பயிர்களுக்கோ சேதம் ஏற்படக் கூடாது என்று கவனமாக இருப்பதாகவும், தற்போது யானை மிகவும் சகஜமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், முதுமலைப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை சின்னத்தம்பியை வனத் துறையினர் பிடிக்கலாம் என்றும், அதை முகாமில் வைத்துப் பராமரிப்பதா அல்லது காட்டில் விடுவதா என்பது குறித்து தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com