கேபிள் டிவி ஒளிபரப்பில் சிக்கல்: 70% வாடிக்கையாளர்கள் தவிப்பு

தமிழகத்தில் டிராய் விதிமுறைகளின்படி விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும் திட்ட அவகாசம் முடிந்து, சாதாரண ஒளிபரப்பு (அனலாக் சிக்னல்) நிறுத்தப்பட்டுள்ள நிலையில், செட்-டாப் பாக்ஸ் முழுமையாக
கேபிள் டிவி ஒளிபரப்பில் சிக்கல்: 70% வாடிக்கையாளர்கள் தவிப்பு


தமிழகத்தில் டிராய் விதிமுறைகளின்படி விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும் திட்ட அவகாசம் முடிந்து, சாதாரண ஒளிபரப்பு (அனலாக் சிக்னல்) நிறுத்தப்பட்டுள்ள நிலையில், செட்-டாப் பாக்ஸ் முழுமையாக வழங்கப்படாதது, சேனல்களின் அதிகக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் 70 சதவீத கேபிள் வாடிக்கையாளர்கள் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி மூலம், சுமார் 100 சேனல்கள், மாதம் ரூ.70 எனும் குறைந்த கட்டணத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதில் உள்ளூர் ஆபரேட்டர்களுக்கு ரூ.50,  அரசு கேபிள் நிறுவனத்துக்கு ரூ.20 வீதம் கட்டணமாகக் கிடைத்தன. அனைத்து மாவட்டங்களிலும், அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சுமார் 70 லட்சம் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கியதன் மூலம் இந்த சேவை சாத்தியமானது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், இந்த சிறப்புத் திட்டத்தால், கேபிள் டிவி ஒளிபரப்புத் தொழிலில், பெரும் முதலாளிகளின் ஆதிக்கம் அதிரடியாகத் தடுக்கப்பட்டது.  மேலும்,  அனைத்து  சேனல்களையும் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் பார்க்கவும் வழிவகை பிறந்தது.

செட்-டாப் பாக்ஸ்

இதனிடையே,  சாதாரண ஒளிபரப்புக்குப் பதிலாக, டிஜிட்டல் தரத்துடன், தொலைக்காட்சி சேனலை ஒளிபரப்பும் வகையில், அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 6 மாதங்களாக இலவசமாக செட்-டாப் பாக்ஸ்  வழங்கி வருகிறது. இந்த நடைமுறையை பெரும்பாலான,  கேபிள் ஆபரேட்டர்களும், வாடிக்கையாளர்களும் பயன்படுத்தவில்லை. மொத்தமுள்ள 70 லட்சம் இணைப்புகளில் 38 லட்சம் இணைப்புகளுக்கு ஆபரேட்டர்கள் மூலம் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த செட்-டாப் பாக்ஸ்கள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தில், செட்-டாப் பாக்ஸூக்கு ரூ.500 முதல் ரூ.1,000, சேனல் கட்டணத் தொகை குறைந்த பட்சம் ரூ.175 முதல் ரூ.220 என ஆபரேட்டர்கள் மூலம் வசூலிக்கப்பட்டதால்,  இதனை பயன்படுத்த பெரும்பான்மை மக்களும் ஆர்வமுடன் முன்வரவில்லை. 

இணைய வழியில், ஒவ்வொரு வாடிக்கையாளரின் ஆதார் எண் மூலம், இந்த செட்-டாப் பாக்ஸ் பதிவு கணக்கில் வந்ததால், இதில்,  வருமானம் இழப்பு ஏற்படும் என்று கருதிய கேபிள் ஆபரேட்டர்களும் இதனை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டாமல் இருந்தனர். இதனுடன் போட்டிக்கு,  சில தனியார் குழுமங்கள், செட்-டாப் பாக்ஸ்களை வழங்கி,  குறைந்த கட்டணத்தில் சேனல்களை ஒளிபரப்பி வருகின்றன. இருந்த போதும், மொத்தத்தில் 30 சதவீதம் பேர் தான் இந்த செட்-டாப் பாக்ஸ் முறை சேவையை பெறுகின்றனர்.

விரும்பிய சேனல்களை தேர்வு செய்யும் முறை

இந்த நிலையில்,  தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை முறைப்படுத்தும் நோக்கத்தில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) , மக்கள் விரும்பிய சேனல்களை அவர்களது விருப்பம் போல் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் ஒளிபரப்பை வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. இந்த நடைமுறை கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம்,  குறைந்தபட்சம் 100 இலவச சேனல்களுடன் ஆரம்ப கட்டணம் ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து 153 குறைந்த பட்ச கட்டணமாக விதிக்கப்படுகிறது. இதனுடன்,  விரும்பிய கட்டண சேனல்களை பார்ப்பதற்கு, தேர்வு செய்யும் ஒவ்வொரு சேனல்களுக்கும்,  உரிய தொகை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.

இலவச சேனல்கள்

அரசு கேபிள் டிவி,  மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனல்கள், ஷாப்பிங் சோன், பாலிமர்,  இமயம்,  வசந்த்,  வேந்தர்,  மக்கள்,  கலைஞர், தமிழன், வின்,  கேப்டன், பெப்பர்,  சூப்பர்,  புதுயுகம்,  வானவில், வெளிச்சம், எஸ் டிவி,  மீனாட்சி, மூன் டிவி, எம்கே,  தீரன்,  செய்தி சேனல்களில், புதியதலைமுறை,  நியூஸ்ஜே, பாலிமர்,  தந்தி,  காவேரி, நியூஸ் 7,  மாலை முரசு,  சத்யம், லோட்டஸ் உள்ளிட்டவை.  இசை சேனல்களில்,  எம்கே,  முரசு,  எஸ்பி,  7 எஸ் மியுசிக், சிரிப்பொலி,  எம்கே சிக்ஸ்,  விளையாட்டு சேனல்களில், தூர்தர்ஷன் சேனல்கள் மட்டுமே இலவசமாக உள்ளன.

கட்டணச் சேனல்கள்

சன் டிவி ரூ.19, கே. டிவி ரூ.19,  சன்லைப் ரூ.9,  விஜய் ரூ.17, கலர் தமிழ் ரூ.3, ராஜ் டிவி ரூ.3,  மெகா டிவி ரூ.3,  ஆதித்யா ரூ.9,  சன்மியூசிக் ரூ.6,  ராஜ் மியூசிக் ரூ.1, ஜெயா டிவி ரூ.3.75 என முக்கிய சேனல்களின் கட்டணப் பட்டியல் நீள்கிறது. விளையாட்டு மற்றும் குழந்தைகளுக்கான சேனல்கள் அனைத்துக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில்,  சோனி வகைகள் ரூ.15 முதல் ரூ.19 வரையும்,  இஎஸ்பிஎன் ரூ.5,  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வகைகள் ரூ.1 முதல் ரூ.19 வரையும் உள்ளன. டிஸ்கவரி ரூ.4,  என்.ஜி.சி ரூ.2,  சோனி பிபிசி ரூ.4, நாட்ஜியோ ரூ.1, பாக்ஸ் லைப் ரூ.1, அனிமல் பிளானெட் ரூ.2  என தொடர்கிறது. குழந்தைகளுக்கான போகா ரூ.4.25,  கார்ட்டூன் ரூ.4.25, சுட்டி ரூ.6,  கிட்ஸ் ரூ.3, மார்வல் ரூ.4 என நீள்கிறது. 

ரூ.200 முதல் ரூ.320 வரை கட்டண  உயர்வு

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சேனல்கள் கட்டணச் சேனல்களாக மாறியுள்ள நிலையில், இலவச சேனல் தொகுப்புடன் விரும்பிய சில சேனல்களை தேர்வு செய்தாலே ரூ.200 முதல் ரூ.320 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. பிற மொழி,  விளையாட்டுச் சேனல்களை தவிர்த்தாலும், கிராமப்புற மக்கள்கூட ரூ.250 செலுத்தினால் தான் குறிப்பிட்ட தமிழ் சேனல்களை பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் பலர் செட்-டாப் பாக்ûஸ விரும்பாமல்,  நேரடியாக சாதாரண ஒளிபரப்பில் வரும் இலவச சேனல்களை மட்டும்  பார்த்து வருகின்றனர். 

செட்-டாப் பாக்ஸ் தட்டுப்பாடு

நகர்ப் புறங்களில்,  வேறு வழியின்றி பலர் செட்-டாப் பாக்ஸ்களை நாடி வருகின்றனர். இதனால், ரூ.500-க்கு வழங்கப்பட்டு வந்த செட்டாப் பாக்ஸூக்கு தற்போது எழுந்துள்ள தட்டுப்பாடு காரணமாக, ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஆகவே, பலரும் செட்-டாப் பாக்ஸ் கேட்டு கேபிள் ஆபரேட்டர்களை நச்சரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது -

பல விதிமுறைகளை வகுத்து, அதனை பின்பற்ற நிர்ப்பந்திக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் செட்-டாப் பாக்ஸ்களை முழுமையாக வழங்கவில்லை.  25 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது. இதனால்,  வாடிக்கையாளர்களிடம் தினமும் பிரச்னையை சந்திக்கிறோம்.

டிராய் விதிமுறைகளுக்கான அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், சாதாரண சிக்னல் ஒளிபரப்பையும் துண்டிக்க அரசு கட்டாய உத்தரவிட்டுள்ளது.  இதனால்,  பெரும்பாலான வாடிக்கையாளர்கள், தொலைக்காட்சி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்ப்பந்திப்பதால், பல ஆபரேட்டர்கள் சாதாரண ஒளிபரப்பை நிறுத்திவிட்டனர். மேலும், ஏற்கெனவே வழங்கப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களில் 3.5 லட்சம் பாக்ஸ்களின் சேவை, தொலைக்காட்சி சேனல்களின் அதிக பட்ச கட்டணம் காரணமாக, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாததால் அவற்றின் சேவையும் முடங்கிவிட்டது.

நகர்ப்புறங்களில்கூட 40 சதவீத செட்-டாப் பாக்ஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. செட்-டாப் பாக்ஸ் முழுவதுமாக வழங்கும் வரை, சாதாரண ஒளிபரப்பை நிறுத்தக் கோரும் அரசின் கெடுபிடி உத்தரவை தளர்த்த வேண்டும். மேலும், சேனல்களின் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். கட்டண முன்தொகை செலுத்தும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை

அரசு கேபிள் டிவி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,  டிராய் உத்தரவின் பேரில்,  டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை வழங்க வேண்டும் என்பதால்,  சாதாரண ஒளிபரப்பு சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. செட்-டாப் பாக்ஸ் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. விரும்பிய சேனல்களைத் தேர்வு செய்து பார்ப்பதற்கு, விண்ணப்பங்களை வழங்கி படிப்படியாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறோம்,  இது மாநிலம் முழுவதும் உள்ள பிரச்னை என்று கூறி நழுவிக்கொண்டனர். 

தவிப்பில் 70 சதவீத வாடிக்கையாளர்கள்

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில்,  அரசு விதிமுறைகள் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும்,  அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் வழங்கும் செட்டாப் பாக்ஸ்கள் 70 சதவீதம் போய்ச்சேராததும், தடாலடியாக சாதாரண சிக்னல் ஒளிபரப்பு சேவை நிறுத்தம், கழுத்தைப் பிடிக்கும் கட்டண சேனல்களின் கட்டணங்கள்,  இணைய வழியில் பதிவேற்றம் செய்து விரும்பும் சேனல்களை தேர்வு செய்வதில் மக்களிடம் உள்ள தெளிவில்லாத நிலை, கேபிள் ஆபரேட்டர்களின் முரண்பாடுகள், தனியார் நிறுவனங்களின் இணைப்புகளை வழங்கி நிர்ப்பந்திப்பது போன்ற பல்வேறு குழப்பமான சூழலில், கேபிள் டிவி ஒளிபரப்பு பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இதனால், அரசு கேபிள் டிவியை நம்பியுள்ள 70 சதவீதம் வாடிக்கையாளர்கள்,  தற்போது, முக்கிய சேனல்களின் ஒளிபரப்பை பார்க்க முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, செட்டாப் பாக்ஸ்களை வழங்குவதில் தீவிரம் காட்ட வேண்டும்,  குறைந்தபட்ச கட்டண விகிதங்களை மாற்றவும், சேனல்களை அணுகி கட்டணங்களை குறைக்கவும்,  தடையில்லாத ஒளிபரப்பை வழங்கவும்,  தமிழக அரசும், துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com