மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியாக வலம் வரும் நிலையில் மறுபக்கம் திமுக கூட்டணி அதே பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்று
மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?


2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியாக வலம் வரும் நிலையில் மறுபக்கம் திமுக கூட்டணி அதே பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்று வருகிறது.

இதற்கிடையே தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும், திமுகவும் முயன்று வரும் நிலையில், அந்த சிதம்பர ரகசியமும் நாளை வெளி உலகுக்குத் தெரிய வந்து விடும்.

சரி ஒரு பக்கம் அதிமுக -  பாஜக - பாமக என களைக்கட்டும்போது, மறுபக்கம் திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சி இன்னும் அதிக கலகலப்போடு தேர்தல் களத்தை எதிர்கொள்ள விருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுவரை!

திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விசிகவுக்கு 2 தொகுதிகளும், சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, ஐஜேகே, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது. 

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகளைக் கொடுத்துவிட்டிருக்கும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஸ்டாலின் - வைகோ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மற்றொரு தொகுதியாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை ஒதுக்குமாறு திமுகவிடம் விசிக கோரியுள்ளது.

இ.கம்யூனிஸ்ட் 2 தொகுதிகள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையிலான குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

கூட்டணி குறித்து முத்தரசன் கூறியது: வரும் மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. மத்தியில் ஆளும் பாஜக,  தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்றவும் ஓர் அரசியல் போராட்டத்தை திமுக முன்னெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் மக்களவைத் தேர்தலுக்காக திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

கோவை, தென்காசி, வடசென்னை, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

ஐஜேகேவுக்கு 1 தொகுதி: இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தலைமையிலான குழுவினர் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஐஜேகேவுக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியது.

கொமதேகவுக்கு ஒரு தொகுதி: மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஈஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. கொமதேகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், ஈஸ்வரனும் கையெழுத்திட்டனர்.

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம்!
மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி தொகுதியும் அடங்கும்.

இந்த வகையில் இருபதுக்கு இருபது என்ற விகிதத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன.

விரைவில், எந்தெந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com