
கோகுல்ராஜ் கொலை வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சாட்சியம் அளிக்க சுவாதி அழைக்கப்பட்டார்.
நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், சம்பவத்தன்று தான் கோயிலுக்குச் செல்லவில்லை என்றும், கோகுல்ராஜ் தன்னுடன் படித்த மாணவர் என்ற அடிப்படையில் மட்டுமே தெரியும் என்றும், சிபிசிஐடி போலீஸார் அளித்த காட்சிப் பதிவுகளை கொண்டு தன்னால் யாரையும் அடையாளம் காட்ட இயலாது எனவும் பிறழ் சாட்சியம் அளித்தார்.
இதனிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோகுல்ராஜ் கொலை வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க நாமக்கல் சிபிசிஐடிக்கும், குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் உத்தரவு பிறப்பித்து வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.