மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம்  ஒப்படைப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை குழு மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பித்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம்  ஒப்படைப்பு

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலான குழு, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைத்தனர். 

மக்களவைத் தேர்த்லுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக இன்று அல்லது நாளை இணைந்துவிடும் என்றும், அதன்பின்னர் அதிமுக போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும். அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும் அதிமுக சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே அதிமுக அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

அவர்கள் தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்னைகள், விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையாக தயார் செய்துள்ளனர். தேர்தல் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் தமிழ்  என இரு மொழிகளிலும் தயாரித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மக்களவைத் தேர்தலுக்காக தயார்செய்யப்பட்டு வந்த தேர்தல் அறிக்கையை, அதிமுக தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோரிடம் பொன்னையன் ஒப்படைத்தார். 

தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com