அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாருக்கு ஆதாரங்கள் எங்கே?: உயர்நீதிமன்றம் கேள்வி

ஒப்பந்த முறைகேடு தொடர்பான புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் எங்கே என அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாருக்கு ஆதாரங்கள் எங்கே?: உயர்நீதிமன்றம் கேள்வி


ஒப்பந்த முறைகேடு தொடர்பான புகாரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் எங்கே என அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்கள், பினாமிகள் மற்றும் அவரது நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக தமிழக ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.மேலும் இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.இளங்கோவன், அறப்போர் இயக்கத்தினர் சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.  அதுதொடர்பான பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சருக்கு எதிரான ஆதாரங்கள் எங்கே, இந்த வழக்கில் இதுவரை ஏன் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பி,விசாரணையை வரும் மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com