
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட இழுபறியில் இருந்துவந்த அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு இறுதியாக ஞாயிற்றுக்கிழமை நிறைவேறியது.
அதன்படி, மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அதிமுக, கடந்த பிப்ரவரி 19-இல் மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையைத் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியது.
அன்றே, தேமுதிகவுடனும் உடன்பாட்டை அதிமுக நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை சாலிகிராமத்திலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்துக்குச் சென்று பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
தொடர் இழுபறி: பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதுபோல, தங்களுக்கும் அதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படவேண்டும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்தது.
இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அப்போது அரசியல் பேசப்படவில்லை என மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், அரசியலும் பேசப்பட்டது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார். இதனால், தேமுதிக, திமுக கூட்டணிக்குச் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக செய்திகள் வெளியானபோது, இரு தரப்பிலும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அதே நேரம், தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தப்படுவதாக அதிமுக தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இச்சூழலில் மார்ச் 6-இல் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியதோடு, பொதுக்கூட்ட மேடையிலும் அனைத்து கூட்டணித் தலைவர்கள் புகைப்படங்களுடன் விஜயகாந்தின் படமும் வைக்கப்பட்டது.
ஆனால், பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து பேச்சு நடத்திய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், அதே நேரத்தில் தனது கட்சி நிர்வாகிகளை சென்னையில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு அனுப்பி திமுக உடனான கூட்டணி தொடர்பாகவும் பேச்சு நடத்தினார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அதிமுக-பாஜக பொதுக்கூட்ட மேடையிலிருந்து விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டது. இழுபறி தொடர்ந்ததால், பொதுக்கூட்டத்தில் தேமுதிக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுக பொருளாளர் துரைமுருகனை, தங்களுடைய சொந்த விஷயமாகவே தேமுதிக நிர்வாகிகள் சந்தித்ததாக சுதீஷ் விளக்கம் அளித்தார். மேலும், கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஓரிரு நாள்களில் எத்தனைத் தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இதே கருத்தை அதிமுக நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
கூட்டணி உடன்பாடு: இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலர் சுதீஷ் ஆகியோர், சாலிகிராமம் இல்லத்திலிருந்து புறப்பட்டு, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடையாறில் உள்ள தனியார் ஓட்டலுக்கு இரவு 7 மணியளவில் வந்தனர்.
அங்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுடன், தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.
4 தொகுதிகள் ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கும்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்குவது என்பது, விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும். அதிமுக தலைமையில் இப்போது அமைந்துள்ள கூட்டணி, வலிமையான கூட்டணி என்றார்.
கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 19 தொகுதிகள் ஒதுக்கீடு: இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மற்றும் புதிய தமிழகம் கட்சி, புதிய நீதி கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.