
18 பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் - மே 23- இல் வாக்கு எண்ணிக்கை
பதினேழாவது மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகள் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுகிறது.
மேலும், ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடைபெறாது என்றும் சுனில் அரோரா மேலும் தெரிவித்தார்.
அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதி: ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்த சுனில் அரோரா, இந்தத் தேர்தலில் முதல் முறையாக அனைத்து தொகுதிகளிலும் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டு காண்பிக்கும் (விவிபேட்) இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறினார்.
16-வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், மே மாதம் 31-ஆம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து, மக்களவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையர்கள், உள்துறை உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படை, காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில், 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதி அட்டவணை மற்றும் நான்கு மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல், சில மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி ஆகியவற்றை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரையிலும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், மகாராஷ்டிரம் உள்பட 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-இல் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 23-இல் 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 29-இல் 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக மே 6-இல் 7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கும், ஆறாம் கட்டமாக 12-இல் 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும், ஏழாம் கட்டமாக மே 19-இல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆந்திரம், அருணாசல், சிக்கிம், ஒடிஸாவில் பேரவைத் தேர்தல்: மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் தேதியில் இந்தத் தேர்தல் சேர்த்து நடைபெறும்.
இடைத்தேர்தல்: அதேபோன்று, பிகார், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிúஸாரம், நாகாலாந்து, தமிழகம், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் காலியாக உள்ள 34 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றார் சுனில் அரோரா.
10 லட்சம் மையங்கள்: தற்போது நாட்டில் 10 லட்சத்து 35 ஆயிரத்து 928 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் 9 லட்சத்து 28 ஆயிரம் வாக்குச் சாவடிகள் மட்டுமே இருந்தன. 10 சதவீதம் அளவு வாக்குச்சாவடிகள்அதிகரிக்கப்பட்டுள்ளது.
90 கோடி வாக்காளர்கள்: 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் சுமார் 90 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது பட்டியலில் 81.45 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது மொத்த வாக்காளர்களில் 1.50 கோடி பேர் 18-19 வயது பிரிவில் உள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 1.66 சதவீதம் ஆகும். "இதர' பாலினத்தவர் 38,325 பேர் உள்ளனர். பணியில் இருக்கும் வாக்காளர்கள் 16 லட்சத்து 77 ஆயிரத்து 386 பேர் ஆவர்.
வாக்காளர் ஸ்லிப்: புகைப்படம் இடம் பெற்ற வாக்காளர் ஸ்லிப், தேர்தல் நடைபெறும் ஐந்து தினங்களுக்கு முன்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாட்டை தேர்தல் அதிகாரி மேற்கொள்வார். வாக்குப் பதிவு மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை, சாய்வுப்பாதை போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் ஆகியோரை மனதில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர் தனது வாக்கை உரிய வேட்பாளருக்கும், சின்னத்திற்கும் செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வாக்கு ஒப்புகைச் சீட்டு வசதியை ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
குற்றப் பின்னணி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி விவரத்தை செய்தித்தாள்கள்,தொலைக்காட்சி சானல்கள் ஆகியவற்றில் தேர்தல் பிரசாரக் காலத்தில் மூன்று தருணங்களில் வெளியிட வேண்டும். வாக்காளர்களில் ஆள்மாறாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒலிபெருக்கி கட்டுப்பாடு: ஒலிமாசைக் கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்தல் காலத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் போதுமான அளவில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்கள்: தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில் போதியஅளவில் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி, பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊடகக் கண்காணிப்பு: மாநிலங்கள், மாவட்ட அளவில் ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடகக் கண்காணிப்புக் குழுக்கள் (எம்சிஎம்சி) அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடங்கள் மற்றும் அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் தேர்தல் செய்திகள் தொடர்பாக கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் சுனில் அரோரா.
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி வரை 9 கட்டமாக நடத்தப்பட்டது. அதில், 66.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது
இடைத் தேர்தல் நடைபெறும் பேரவைத் தொகுதிகள்
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் இப்போது நடத்தப்படவில்லை.
தற்போது பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும்.
அதுபோல புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.
தமிழகத் தேர்தல் விவரம்
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் மார்ச்19
கடைசி நாள் மார்ச் 26
பரிசீலனை மார்ச் 27
திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 29
வாக்குப்பதிவு ஏப்ரல் 18
வாக்கு எண்ணிக்கை மே 23