
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நாளை மறுநாள் புதன்கிழமை (மார்ச் 13) நேர்காணல் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.
பதினேழாவது மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் அறிவித்த நிலையில், நீண்ட இழுபறியில் இருந்துவந்த அதிமுக - தேமுதிக கூட்டணி உடன்பாடு இறுதியாக நிறைவேறியது.
அதன்படி, மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜகவுக்கு 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மற்றும் புதிய தமிழகம் கட்சி, புதிய நீதி கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நாளை மறுநாள் (மார்ச்13) புதன்கிழமை காலை 10 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.