
மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள பேட்டரி டார்ச் சின்னம் தமிழகத்துக்கு ஒளி தரும் விளக்காய் மிளிரும் என்றார் அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:
மிகவும் பொருத்தமான சின்னத்தை எங்களுக்கு வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
தீமைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பெரும் முனைப்போடு தொடங்கப்பட்ட கட்சிக்கு, இது மிகவும் பொருத்தமான சின்னமாக எங்களுக்குத் தோன்றுகிறது. தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் ஒளிதரும் புதிய விளக்காய் இன்று முதல் ஒளிரும். டார்ச் சின்னத்தை வைத்தாவது கட்சியைக் கண்டுபிடிக்கட்டும் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்த கேள்விக்கு, எந்தக் கட்சி என்று அவர் சொல்லாவிட்டால், அவருடைய கட்சியைத்தான் நினைக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே, நோட்டாவில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்தக் கட்சியைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இந்த டார்ச் பயன்படும். இதை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் எல்லாம் காணாமல் போவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பெயர் மாற்றி வைத்துள்ளார்களே, அந்த நடிகரில் இருந்து சொல்கிறாரா எனத் தெரியவில்லை. எல்லா நடிகர்களையும் ஒரே மாதிரியாகச் சொல்ல முடியாது. தேர்தல் பதற்றத்தில் அப்படிச் சொல்கிறார்.
மக்கள் நீதிமய்யக் கூட்டணிக்கு நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன். அப்படி என்றாலே, முக்கால்வாசி பேர் ஒதுக்கப்பட்டுவிட்டனர் என்றுதான் அர்த்தம். எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி.
மக்களுடனான கூட்டணி இது. மார்ச் 11முதல் 15- ஆகிய தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். 1,137 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். 40 தொகுதிகளிலும் டார்ச் ஒளி வீச வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில், சட்டம் என்பது வேறு. அதில் குறுக்கிட முடியாது. ஆனால், கருணை என்று ஒன்று இருக்கிறது. அதைக் காட்ட வேண்டும் என்பதே என் கருத்து.
ரஜினி ஆதரிப்பார்: மக்களவைத் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ஆதரவு கேட்பதைவிட கொடுப்பதுதான் பெரிய மனசு. கேட்பது என்பது, ஒருவித சங்கோஜத்தை இரு தரப்பினருக்குமே ஏற்படுத்தும்.
ஆதரவு தருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துகிறோம். நானும் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். எந்தத் தொகுதி என்பதை பிறகு அறிவிப்பேன் என்றார்.