
சென்னை: நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டாமல் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய இடைத்தேர்தல்களையும் மற்ற 18 தொகுதி இடைதேர்தல்களுடன் நடத்த வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டது.
கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை இன்று அறிவிக்கப்படவுள்ளது. அது போல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணலும் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தப்படும். ஊராட்சி சபை மூலம் ஏற்கனவே திமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
தமிழகத்தில் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படாது என்று அறிவித்தார். இந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளது. தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தள்ளி வைத்ததில் உள்நோக்கம் உள்ளது என குற்றம்சாட்டிய ஸ்டாலின், 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம். வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை; இதில் உள்நோக்கம் உள்ளது.
3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என் ஸ்டாலின் தெரிவித்தார்.