66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் 66.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் 66.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
 திட்டமிடப்பட்ட இலக்கில் 92 சதவீதம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், விடுபட்டவர்களுக்கு திங்கள்கிழமை முதல் வீடு தேடிச் சென்று மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
 முன்னதாக, மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்பட 43,051 இடங்களில் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 இதைத் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடமாடும் சொட்டு மருந்து மையங்களும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் 1,652 சிறப்பு மையங்களும் செயல்பட்டன.
 சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டுவிரலில் மை வைக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ முகாம்கள் செயல்பட்டன.
 சென்னையைப் பொருத்தவரை மொத்தம் 1,644 முகாம்கள் அமைக்கப்பட்டு 6.73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
 இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
 இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
 போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்த போதிலும், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. நிகழாண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு 92 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
 விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று போலியோ மருந்து வழங்கப்பட உள்ளது.
 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளில் அடுத்த வாரம் சனிக்கிழமை வரை 24 மணி நேரமும் போலியோ மருந்து வழங்கப்படும்.
 அதேபோன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகளில் வரும் செவ்வாய்க்கிழமை வரை சொட்டு மருந்துகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ மருந்து கிடைக்க பெற்றோர்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.
 முதல்வர் தொடங்கி வைத்தார்
 போலியோ முகாம்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
 அதைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 139 சித்த மருத்துவ மருந்தாளுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், கூடுதல் செயலாளர் எஸ். நாகராஜன், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பி. அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநில நலவாழ்வுக் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் எஸ்.கணேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com