பொள்ளாச்சி பாலியல் பயங்கர விவகாரம்: முக்கிய குற்றவாளி யார்? 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியும் முகநூலில் முகம் தெரியாமல் பழகிய பெண்களை
பொள்ளாச்சி பாலியல் பயங்கர விவகாரம்: முக்கிய குற்றவாளி யார்? 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறியும் முகநூலில் முகம் தெரியாமல் பழகிய பெண்களை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அப்பெண்களை மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்தும் வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ள இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜனின் நண்பர்கள் சிலர் புகார்தாரரைத் தாக்கியுள்ளனர். அந்த வழக்கில் பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றவாளிகளிடம் இருந்து 4 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் திருநாவுக்கரசின் செல்லிடப்பேசியில் இருந்து 4 விடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடியோக்களில் இருப்பவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கேட்டு திருநாவுக்கரசு கூட்டாளிகள் மிரட்டியுள்ளனர். பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்து இறந்த பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட கும்பல் பெண்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நாகராஜ் யார்?: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் பார் நாகராஜ். இவர் பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்தது. மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கல் தொழிலும் செய்து வருகிறார். இவர் கடந்த 27-ஆம் தேதி புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக நாகராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 28ஆம் தேதியே அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் திருநாவுக்கரசுக்கு பார் நாகராஜ் நண்பர் ஆவார். 

ஒழுங்கு நடவடிக்கை: இந்நிலையில், பார் நாகராஜ் மீது அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. கட்சி கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து திங்களன்று இரவு டிஜிபி அலுவலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை அளித்தார். 

இந்த நிலையில் தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காகதான் போலீஸில் புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. அப்போது மேலும் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், பாலியல் வழக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு ஆதரவாகத்தான் வாதாட மாட்டோம் என வழக்குரைஞர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடத் தயார் என வழக்குரைஞர்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com