சுடச்சுட

  

  தேர்தல் நடைமுறையால் முடங்கியது ஈரோடு ஜவுளிச் சந்தை: 15 சதவீதமாக விற்பனை சரிவு

  By DIN  |   Published on : 13th March 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  erode

  வெறிச்சோடிய ஈரோடு கனி ஜவுளிச் சந்தை. 


  தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜவுளி ரகங்களில் 15 சதவீதம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகி உள்ளதாக  வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். 
  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
  இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச் சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் கூறியதாவது: வங்கியில் பணம் கட்ட ரசீதுடன் எடுத்துச் சென்றால் கூட, அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கும் நிலை உள்ளது. வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும்போது, உடனே வங்கி கணக்குப் புத்தகத்தில் பதிவு மேற்கொள்ள முடியாத நிலையில் ஆதாரம் காட்டுவதும் சிரமமாக உள்ளது.
  எனவே, வணிகர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டினால் சோதனைக்குப் பின்னர் அனுப்பி விட வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் வரை வணிகர்கள் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். அதிகத் தொகை எடுத்துச்செல்வதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பணத்தைப் பறிமுதல் செய்யாமல் வணிகரிடம் விசாரணை நடத்தி ஆதாரங்களைப் பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.
  கனி ஜவுளிச் சந்தையில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை பகலில் நிறைவடையும். மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,  கர்நாடகம், ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். 
  தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் சந்தை கூடினாலும், ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து தொடங்கிய கெடுபிடிகளால் இந்த வாரம் ஜவுளிச்சந்தை முடங்கியது. சந்தையில் இருப்பு வைக்கப்படும் ஜவுளி ரகங்களில் வாரந்தோறும் 50 சதவீதம் வரை விற்பனை இருக்கும். இந்த வாரம் 15 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடந்தது.
  கோடைக்கால ஆடைகள் விற்பனை 2 வாரங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட நிலையில், பருத்தி ஆடைகள் சந்தையில் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால், வியாபாரிகள் வராததால் 70 சதவீதம் அளவுக்குத் தேங்கியுள்ளன.  ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரை இந்த நிலை தொடர்ந்தால் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
  மேலும் கோடைக் காலத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தேங்கும் நிலை ஏற்படும். இதனால் வியாபாரிகள் கடும் இழப்பைச் சந்திக்கும் சூழல் நிலவுகிறது. 
  கனி ஜவுளிச் சந்தையைப் பொருத்த வரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து பேரம் பேசி வாங்க முடியும். ரொக்கமாக பணம் கொடுக்கும்போது மட்டுமே இது சாத்தியம். எனவே, சிறு வியாபாரிகள் ரொக்கக் கொள்முதல் விற்பனையைத் தான் விரும்புகின்றனர். 
  எனவே ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதில் விதிகளைத் தளர்த்த வேண்டும். ஜவுளிச் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் ஜவுளிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை சோதனை செய்தாலும், ஜவுளி வாங்கியதற்கான ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைக்க வேண்டும்.
  ஜவுளி வாங்க வரும் வியாபாரிகள் ரூ. 5 லட்சம் வரை பணமாக எடுத்துவர அனுமதி அளிக்க வேண்டும் என்று சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai