சுடச்சுட

  
  tea

  குன்னூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் துளிர் விட்டுள்ள தேயிலைகள்.


  நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் மழையால் தேயிலைச் செடிகளில் இலைகள் துளிர் விடத் துவங்கியுள்ளன. கோடை மழை பெய்தால் மகசூல் மேலும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

  நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத விவசாயிகள் தேயிலை சாகுபடியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் பனிப் பொழிவால் பல்லாயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் கருகி பாதிக்கப்பட்டன. இதனால் மலைக் காய்கறித் தோட்ட விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. 

  மேலும், கூட்டுறவுத் தொழிற்சாலை, தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளில் தேயிலை வரத்து இதுவரை காணாத அளவுக்கு குறைந்தது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் தேயிலை வரத்து கணிசமான அளவு  குறைந்த காரணத்தால் பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 
  சொற்ப அளவிலான தொழிற்சாலைகளில் வாரத்துக்கு ஒரு முறை மட்டும் தேயிலைத் தூள் உற்பத்தி நடந்து வருகிறது. கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் செலவினங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நான்கு நாள்களுக்கு ஒரு முறை உற்பத்தி செய்து வருகின்றனர்.  
  தேயிலைத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகவே சரிவர வேலை இல்லாததால் கட்டடப் பணி உள்ளிட்ட பிற பணிகளைத் தேடி மற்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
  மாவட்டத்தில் நிலவிய பனியின் தாக்கம் இம்மாதத் துவக்கம் முதல் சற்று குறையத் துவங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக குன்னுôர் குந்தா சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு முறை மழை பெய்தது. 
  இந்த மழை இன்னும் ஓரிரு முறை பெய்தால் தேயிலைச் செடிகளுக்கு ஈரபதம் ஏற்பட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக  விவசாயிகள் கருதுகின்றனர்.  
  தேயிலைத் தோட்டங்களுக்கு மழை தொடர்ந்து பெய்ய வேண்டியதில்லை. அவ்வப்போது பெய்யும் கனமழைக்கு நல்ல ஈரப்பதத்துடன், வெயில் தென்பட்டால் தேயிலை துளிர்விட்டு படிப்படியாக மகசூல் அதிகரித்து விடும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai