சுடச்சுட

  

  பொள்ளாச்சி கொடூரம்: வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணை வெளியீடு

  By DIN  |   Published on : 14th March 2019 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cbi-mainFF01


  சென்னை: பொள்ளாச்சியில் ஆபாச விடியோ வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  முன்னதாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

  இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

  முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருக்கும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை குறி வைத்து கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் நெருங்கிப் பழகி உள்ளது. அக்கும்பல், பெண்களிடம் நெருக்கமாகப் பழகிய பின்னர், அவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும்,  அதை தங்களது செல்லிடப்பேசியில் விடியோ காட்சிகளாக எடுத்து மிரட்டியுள்ளனர்.

  இக்கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், அண்மையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (27), அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25),  சதீஷ் (28),  வசந்தகுமார் (24)  ஆகிய 4 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

  போலீஸார் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கும்பல் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியும்,  காதலிப்பதாகக் கூறியும் பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி ஆபாச விடியோ எடுத்து வைத்திருப்பதும், அந்த விடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி அந்த பெண்களை போலீஸாரிடம் புகார் செய்யவிடாமல் வைத்திருப்பதும் தெரியவந்தது.

  சிபிசிஐடிக்கு மாற்றம்: இதற்கிடையே, இச் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.  அதேபோல மாநிலம் முழுவதும் சில கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதன் விளைவாக, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி தே.க.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

  இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் உடனடியாக வழக்கு தொடர்பான ஆவணங்களை பொள்ளாச்சி போலீஸாரிடம் இருந்து பெற்று விசாரணையைத் தொடங்கினர்.

  சிபிஐக்கு மாற்றம்
  இந்த நிலையில் பொள்ளாச்சி ஆபாச விடியோ வழக்கின் விசாரணையை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியுள்ளது.

  இந்த வழக்கை சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரிக்கக் கோரி தமிழக அரசு, மத்திய அரசின் உள்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தது.

  4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
  ஆபாச விடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

  கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஜோதி நகரைச் சேர்ந்தவர் சபரி (எ) ரிஷ்வந்த் (25), கட்டடப் பொறியாளர். இவர், பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியை செல்லிடப்பேசியில் ஆபாச விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

  அந்த விடியோவைக் காட்டி அவரும் அவரது நண்பர்களும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளனர். மேலும், மாணவியிடம் இருந்த ஒரு பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  

  இதுதொடர்பாக மாணவி தரப்பில் அளித்த புகாரின்பேரில்,  சபரி (எ) ரிஷ்வந்த், வசந்த்குமார், சதீஷ்குமார் ஆகியோரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். முக்கிய எதிரியாகக் கூறப்படும் திருநாவுக்கரசு, கடந்த 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

  இந்நிலையில், திருநாவுக்கரசு,  சபரி (எ) ரிஷ்வந்த், வசந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரையும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

  ஜாமீன் மனு தள்ளுபடி: இந்த வழக்கில் முக்கிய எதிரியாகக் கூறப்படும் திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா, பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட்,  திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். 

  பொதுமக்களுடன் வாக்குவாதம்: பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்துக்கு ஜாமீன் தொடர்பான விசாரணைக்கு வந்த திருநாவுக்கரசின் தாய் லதாவிடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், உங்கள் மகன் இவ்வளவு தவறு செய்து உள்ளாரே எனக் கேட்க, அதற்கு அவர் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai