சுடச்சுட

  

  வேதாரண்யம் பகுதியில் தொடரும் வயிற்றுப் போக்கு, வாந்தி: 100 பேருக்கு சிகிச்சை

  By DIN  |   Published on : 14th March 2019 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hospital

  வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவர்கள்.

  வேதாரண்யம் பகுதி கிராம மக்களுக்கு கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில், புதன்கிழமை 30 சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் ருக்மணி (65) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு இருந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. தொடர்ந்து வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 30 சிறுவர்கள் உள்ளிட்ட 57 பேரும், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவிர ஆயக்காரன்புலம் சுகாதார நிலையத்தில் 19 பேருக்கும், வாய்மேடு நிலையத்தில் 17 பேர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறையினர் சிகிச்சையளித்தனர். 
  இதுதவிர வண்டுவாஞ்சேரி, வாய்மேடு, தாணிக்கோட்டம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 
  இவை தவிர ஆதனூர், சிறைமீட்டான்காடு, ஆறுகாட்டுத் துறை, தேத்தாக்குடி உள்ளிட்ட இடங்களிலும் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தியகராஜன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து விவரம் கேட்டறிந்தனர். 
  குடிநீர் காரணமா ?: வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்புக்கு குடிநீர் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த சில நாள்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோக குழாய் பாதையின் பிரதான பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
  இதையடுத்து, சில நாள்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால், ஏற்கெனவே பிடித்து வைத்திருந்த தண்ணீர், மாற்று குடிநீரை பருகியதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 
  மேலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோகப் பாதையில் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த தண்ணீர் நஞ்சாக மாறி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சுகாதாரத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai