சுடச்சுட

  

  அறிமுகமற்ற நபர்களிடம் செல்லிடப்பேசியில் பேசுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்: காவல் துறை கண்காணிப்பாளர்

  By நாமக்கல்  |   Published on : 15th March 2019 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  women

  செல்லிடப்பேசியில் அறிமுகமில்லாத நபர்களிடம், தேவையின்றி பேசுவதையோ,  பழகுவதையோ பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு.

  அவர், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது; இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு,  மேற்கு மண்டல காவல் துறைக்கு உள்பட்ட மாவட்டங்களில், கல்லூரி மாணவ,  மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்கள்,  தங்களது கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கி, அதில் சிலர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அவ்வாறு பயிற்சி அளிக்கும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்க உள்ளோம். 

  தற்போதைய சூழலில், செல்லிடப்பேசி வழியாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து விட்டன.  முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு,  தங்களுடைய வாழ்வை தொலைக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில், பெண் ஒருவர் தற்கொலை செய்யும் மனநிலைக்குச் சென்று, பின் திடீரென காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் கொடு என தோழி ஒருவர் கூறியதையடுத்து,  என்னைச் சந்திக்க வந்தார். ஹ அவரிடம் என்னவென்று விசாரித்தபோது, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது.  ஒரு நாள் திருச்செங்கோடுக்கு வந்து என்னைச் சந்தித்தார்.  அப்போது நாங்கள் எல்லை மீறி விட்டோம்.  

  அவர் எனக்கு ரூ.25 ஆயிரம் கடனாகக் கொடுத்தார்.  தற்போது, மீண்டும் தன்னைச் சந்திக்க வருமாறு அவர் தொந்தரவு கொடுக்கிறார்.  இந்த தகவல் கணவருக்கு தெரியவந்தால்,  வாழ்க்கை பாழாகி விடும்.  ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது என கண்ணீர் விட்டார்.  அதன்பின் அவரை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என அனுப்பி வைத்தோம். அதேபோல்,  மோகனூர் அருகே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.  அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது,  முகநூல் மூலமாக கரூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பழகி உள்ளார்.  மிகவும் நெருக்கமாக பழகிய நிலையில்,  அவரது முகவரியைக் கண்டறிந்து கரூருக்குச் சென்று விட்டார்.

  சம்பந்தப்பட்ட முகவரிக்குச் சென்றபோது அப் பெண், 19 வயதான இவரை விட 10 வயது அதிகம் என்பதும்,  அவருக்கு திருமண ஏற்பாடும் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.  இதனால் மனமுடைந்த இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார். மேலும், பிகார்,  ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற வட மாநிலங்களில்,  கல்வியறிவில்லாத வயதான பெண்மணிகளிடம் அன்பாகப் பழகி, அவர்களது வங்கிக் கணக்கைப் பெற்று, தமிழகத்தில் உள்ளவர்கள் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, அவர்களது ஏடிஎம் எண்ணைப் பெற்று பண மோசடி செய்யும் கும்பல் அதிகம் உள்ளது.  

  இதனால் வெளிநபர்கள் யாராவது வங்கி எண்,  ஏடிஎம் எண் போன்றவற்றை கேட்டால் கொடுக்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற செல்லிடப்பேசி அழைப்புகளை பெண்கள் தவிர்க்க வேண்டும்.  அவ்வாறா எண்களை "ஸ்பாம்' என போட்டு வைத்துக்கொண்டால் பிரச்னைகள் நம்மை அணுகாது. சில தினங்களுக்கு முன், வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் மனைவி,  மகள் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாகவும்,  சேலம் அரசு மருத்துவமனையில் உடல் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை ஒருவர் கூறியுள்ளார்.  

  அவர் செல்லிடப்பேசியில், மகள்,  மனைவியைத் தொடர்பு கொண்டபோது எடுக்காததால், அச்சத்தில் சேலம் அரசு மருத்துவமனை சென்று அழுது துடித்துள்ளார்.  பின்னர், அவரது மகள் செல்லிடப்பேசியில் பேசியதைத் தொடர்ந்து நிம்மதியானார்.  இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், நாங்கள் விசாரணை நடத்தினோம்.  அப்போது, குளித்தலையைச் சேர்ந்த மனநலம் பாதித்த இளைஞர் ஒருவர் ஏதாவது ஓர் எண்ணைத் தொடர்பு கொண்டு இவ்வாறான பொய் தகவல்களை கூறிவந்தது தெரியவந்தது.  பின்னர், அவரது பெற்றோரை எச்சரித்து வந்தோம். 

  இவ்வாறு செல்லிடப்பேசி வழியாக பல குற்றங்கள் நடைபெறுகின்றன.  முக்கியமாக,  செல்லிடப்பேசியை அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம்;  அதில் புகைப்படங்கள், முக்கிய ஆதாரங்கள் ஏதேனும் இல்லாதபட்சத்தில் பழுது நீக்க கொடுக்கலாம்.  இல்லையேல் உடைத்தெறிவது நல்லது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai