சுடச்சுட

  

  சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது வாக்குப் பதிவு : தேர்தல் ஆணையத்தின் பதிலில் உயர்நீதிமன்றம் அதிருப்தி

  By DIN  |   Published on : 15th March 2019 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Highcourtmdu


  சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெறுவது குறித்து தேர்தல் ஆணையம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
   மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி தாக்கல் செய்த மனு: மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18- ஆம் தேதி பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அன்றைய தினம் நடைபெறும் வாக்குப் பதிவில் வாக்காளர்கள் பங்கேற்பதும், திருவிழா நடைபெறும் பகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்வதும் கடினம். 
  இந்த சித்திரை திருவிழாவில் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள் என்பதால் தென் மாவட்டங்களிலும் தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
  இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், மதுரை மாவட்ட  ஆட்சியர் மற்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் அளித்த அறிக்கையின்படி ஏப்ரல் 18 -ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்துவதில் சிக்கல் இல்லை. அன்றைய தினம்  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்றினால்,  நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தார். 
  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும்போது தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத வாக்குப்பதிவு நோக்கம் எப்படி நிறைவேறும்?  சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும்  வீதிகளில் 59 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்கள் உள்ள பகுதிகளில் 200 மீட்டருக்குள் வாக்காளர்கள் தவிர மற்றவர்களை அனுமதிக்க முடியாது. சாலைகளில் தடுப்பு வைக்கப்பட்டு சாலையின் அளவு குறைக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் போது, தேர் எப்படி ஓடும்,  திருவிழா எப்படி நடக்கும்? தேர்தல் நடக்கட்டும், திருவிழா நடக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் நினைக்கிறதா என்று  கேள்வி எழுப்பினர்.
    தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லை. மதுரை மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் ஏப்ரல் 18 - ஆம் தேதி சித்திரை திருவிழாவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள், தேரோட்டம் நடைபெறும் வழித்தடத்தில் 59 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாக்குப்பதிவு நடைபெறுவதில் பல்வேறு  நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai