சுடச்சுட

  

  தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களுக்கு அனுமதித்த செலவுத் தொகை எவ்வளவு? ஆட்சியர் விளக்கம்

  By ராமநாதபுரம்  |   Published on : 15th March 2019 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rupees2

  ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில்  அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகைகள் குறித்து தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவராவ் விளக்கம் அளித்தார்.  

  ராமநதாபுரம் மக்களவைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 3 நாள்களாக பல்வேறு பகுதியில் கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சோதனையின் போது பொதுமக்கள் கொண்டுவரும் பணத்துக்கு முறையான கணக்கு வைத்திருந்தால், அவர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் செலவுக்காக தேவையான பணம் கொண்டுவருவது இயல்பு. அதற்குரிய கணக்கு சரியாக இருப்பதும் அவசியம்.    அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது ரூ.50 ஆயிரம் வரை வைத்திருக்கலாம். மேலும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேனர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பொருள்களை வைத்திருக்கலாம். அரசியல் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்தின் போது ரூ.1 லட்சம் வரையிலும் வைத்திருக்கலாம்.

  கட்சியின் பொருளாளரும் ரூ.1 லட்சம் வரை வைத்திருக்கலாம்.  வேட்பாளரின் முகவர், கட்சி உறுப்பினர்கள் ரூ.50 ஆயிரம் வரை வைத்திருக்கலாம். அனுமதிக்கப்பட்ட தொகைக்கு சம்பந்தப்பட்டோர் கணக்கு காட்டுவதுடன், அதற்கு மேலாக வைத்திருந்தால் உடனடியாக பணம் கைப்பற்றப்படும். ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலுக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை அரசியல் கட்சியினரின்  1,264 சுவர் ஓவியங்கள்  5,253 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.    தனியார் சுவர்களில் வரையப்பட்ட அரசியல் விளம்பரம் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.  

  கண்டிப்பு: முன்னதாக அவர் வாகனத் தணிக்கை குழுக்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு பேசியது: வாகனத் தணிக்கையில் ஈடுபடுவோர் முறையாக சோதனையிட்டு அதை குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டும். முறையான கணக்குடன் பணத்தை எடுத்துச் செல்வோரை காக்க வைக்கவோ, எரிச்சலடையும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது. அதே நேரத்தில் வாகனச் சோதனையை முறையாக நடத்தவேண்டும்.  குறிப்பிட்ட வீடுகளில் பணம் இருப்பதாக தெரியவந்தால், காவல்துறையினர் நேரடியாகச் சென்று சோதனையிடக் கூடாது.

  வருமான வரித் துறை குழுவிற்கு தகவல் தெரிவித்து அவர்கள் வரும் வரை குறிப்பிட்ட வீட்டை தீவிரமாக கண்காணிப்பது அவசியம் என்றார்.    வாகனச் சோதனையில் முறையாக ஈடுபடாத குழுக்களில் இடம் பெறும் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai