சுடச்சுட

  

  பண நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

  By DIN  |   Published on : 15th March 2019 11:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  saku


  பண நடமாட்டம் குறித்து வருமான வரித் துறையிடம் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை வெளியிட்டார்.
  சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். 
  உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.3 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பொது,  தனியார் சுவர்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
  பொது சுவர்களில் செய்யப்பட்ட விளம்பரங்களைப் பொருத்தவரை 64,385 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
  தனியார் இடங்களைப் பொருத்த வரையில் 34 ஆயிரம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், 875 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  ஹவாலா முகவர்கள் கண்காணிப்பு: உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் உள்ளிட்ட பொருள்களைக் கண்காணித்து, பிடிப்பது தொடர்பாக வருமான வரித் துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 
  அதன்படி, விமான நிலையங்கள், பெரிய ரயில் நிலையங்கள்,  மிகப்பெரிய விடுதிகள், பண்ணை வீடுகள், ஹவாலா முகவர்கள், பான் புரோக்கர்கள்,  பணத்தை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களைக் கண்காணிக்க வருமான வரித் துறையை அறிவுறுத்தியுள்ளோம். 
  மேலும், சந்தேகிக்கும் வகையில் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட  பணத்தை எடுத்துச் சென்றால் அதனை கடுமையாகக் கண்காணிக்கக் கூறியுள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைக் காலத்தில் பணம் எடுத்துச் செல்லப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வருமான வரித் துறை சார்பில் அதன் தலைவர் சில தகவல்களைக் கொடுத்துள்ளார்.
  மக்களும் தகவல் அளிக்கலாம்: அதிக அளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்களுக்குத் தெரிய வந்தால் அதுகுறித்த தகவல்களை வருமான வரித் துறையினருக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 425 6669-லிலும், 044 - 2826 2357 என்ற தரைவழி தொலைபேசியிலும்,  itcontrol.chn@gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். 
  94454 67707 என்ற கட்செவி அஞ்சல் எண் வழியாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம். தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
  பொது மக்களுக்கு சிக்கல் ஏதும் இல்லாமல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என அதிகாரிகளிடமும்,  அலுவலர்களிடமும் அறிவுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் பறக்கும் படைகளும், கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 702 கண்காணிப்புப் படைகளும், 702  பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தலா 8 மணி நேரம் பணியாற்றும் வகையில், ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் மூன்று குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
  இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றும். மேலும், பேரவைத் தொகுதிக்கு ஒரு விடியோ பதிவுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் பணம் குறித்த விவரங்கள், ஆவணங்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
  மூன்று அதிகாரிகள் கொண்ட இக்குழுவானது சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் ஆவணங்களைச் சரிபார்த்து உடனடியாக அவற்றை விடுவிப்பர். ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் 24 மணி நேரத்துக்குள் பணத்தை விடுவிப்பர். 
  தேர்தல் பணிக்காக இல்லாமல் பொது மக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லும்போது அதுகுறித்த தகவல்கள் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதனால், பணம் பறிமுதல் செய்யப்படுவது தவிர்க்கப்படும். 
  தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் பணியைத் தொடங்கும்போது, கண்காணிப்புக் குழுக்களை அதிகப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai