சுடச்சுட

  

  பொள்ளாச்சி கொடூரம்: சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிடுக -  மதுரைக் கிளை

  By DIN  |   Published on : 15th March 2019 12:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  High-court-of-madurai

  மதுரை: பொள்ளாச்சியில் ஆபாச விடியோ விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பகிர்வதும், வெளியிடுவதும் குற்றம் என்பதை பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

  வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளங்களை நீக்கிவிட்டு, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

  மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான விடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்கவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி இரண்டு நாட்களுக்கு முன்பு பிறப்பித்தார்.

  இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விடியோ தொடர்பாக, தமிழக அரசின் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த வழக்கினை மத்திய குற்றப் புலனாய்வு முகமையிடம் (சிபிஐ) ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் 1946-இன் படி, இதற்கான ஒப்புதலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்துள்ளார் என்று தனது உத்தரவில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தெரிவித்திருந்தார்.

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விடியோ தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விடியோ வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முடிவு செய்தது. இந்த முடிவின் அடிப்படையில் சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான அரசு உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்திருந்தார்.

  இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், பெற்றோரின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், புதிய அரசாணையைப் பிறப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai