சிங்கப்பூர், மலேசியா, இலங்கை படைப்புகளுக்கு கரிகாற் சோழன் விருது: முஸ்தபா அறக்கட்டளை அறிவிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கரிகாற் சோழன் விருதுக்கு தேர்வு செய்யப்படட்ட  சிங்கப்பூர், மலேசியா, இலங்கையைச் சேர்ந்த   மூன்று படைப்புகளுக்கு மார்ச் 21-ஆம் தேதி சென்னையில்
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை படைப்புகளுக்கு கரிகாற் சோழன் விருது: முஸ்தபா அறக்கட்டளை அறிவிப்பு


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கரிகாற் சோழன் விருதுக்கு தேர்வு செய்யப்படட்ட  சிங்கப்பூர், மலேசியா, இலங்கையைச் சேர்ந்த   மூன்று படைப்புகளுக்கு மார்ச் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக  சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ. முஸ்தபா தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி ஆய்வு இருக்கை  மூலம், ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்கு, கரிகாற்சோழன்  விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2017- ஆம் ஆண்டு கரிகாற் சோழன் விருதுக்காக, , தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை , இம்மூன்று நாடுகளிலும்,  தமிழ்ப் படைப்புகள், படைப்பிலக்கியம், ஆய்வு என பல்வேறு பிரிவுகளில் வெளிவந்த தமிழ் நூல்களைத் திரட்டி விருதுக்கு அனுப்பி வைத்தது. அதில், இலங்கையிலிருந்து 34 நூல்களும், சிங்கப்பூரிலிருந்து 16 நூல்களும், மலேசியாவிலிருந்து 12 நூல்களும் வரப்பெற்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நூல்களை, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் மதிவாணன், திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வரும், தமிழறிஞருமான சண்முக. செல்வகணபதி, திருச்சி, ஈவெரா- அரசுக் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து  விருதுக்கான படைப்புகளைத்  தேர்ந்தெடுத்தனர்.
அதில், இலங்கை பெண் எழுத்தாளர் ஜுனைதா செரிப் எழுதிய புதினமான சூனியத்தை நோக்கி என்ற படைப்பும்,  சிங்கப்பூரைச் சேர்ந்த செ. பாலசுப்ரமணியம் எழுதிய விழித்திருக்கும் நினைவலைகள் என்ற படைப்பும், மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ஜி. ஜான்சன் எழுதிய தொடுவானம் என்ற தன்வரலாற்று நூலும் கரிகாற் சோழன் விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து,  சென்னை, மயிலாப்பூர் எண் 6,  2-ஆவது பிரதான சாலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில், மார்ச் 21-ஆம் தேதி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்பிரமணியன் தலைமையில்  நடைபெறவுள்ள விழாவில், கரிகாற் சோழன் விருது வழங்கப்படுகிறது.  நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க்கல்வித் துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கவிஞர் மு. மேத்தா, ரிசர்வ் வங்கி முன்னாள் மண்டல இயக்குநர்  ஜெனரல் சதக்கத்துல்லா, மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவர் மன்னர் மன்னன் மருதை,  சிங்கப்பூர் வாசகர் வட்டத் தலைவர் சித்ரா ரமேஷ், கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி ஜி. ராஜகுலேந்திரா உள்ளிட்டோர்  பங்ககேற்று வாழ்த்துகின்றனர். நிகழ்வை, சிலாங்கூர் டைம்ஸ் ஆசிரியர் நவாஸ்  தொகுத்தளிக்கிறார். எனவே, தமிழறிஞர்கள், சான்றோர்கள்,  தமிழார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com