தமிழகத்தில் 285 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

நிகழாண்டில் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 285 பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இருவர்


நிகழாண்டில் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 285 பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 1,103 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் அந்நோயின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும்,  அந்த வைரஸ்களை முழுமையாக ஒழிக்க இயலவில்லை.
இந்நிலையில், மாநில வாரியாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் தொடர்பான மத்திய சுகாதாரத் துறை தரவுகளை ஆய்வு செய்தபோது,  நிகழாண்டில் மட்டும் ராஜஸ்தானில்தான் அதிகபட்சமாக பன்றிக் காய்ச்சலுக்கு 162 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளம், தெலங்கானா, கர்நாடகம்,ஆந்திரப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கு தமிழகத்தைக் காட்டிலும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்ததன் காரணாகவே தமிழகத்தில் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com