சுடச்சுட

  

  அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  By DIN  |   Published on : 17th March 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  admk

  அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) வெளியாகவுள்ளது.
   சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இணைந்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரங்களை வெளியிட உள்ளனர்.
   இந்த அறிவிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
   வேட்பாளர்கள் அறிவிப்பு:
   அதிமுக கூட்டணியில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
   மேலும், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
   எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டாலும், யார் யாருக்கு, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்த விவாதங்கள், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வந்தது.
   இந்தச் சிக்கல்களுக்கு சனிக்கிழமை இரவில் தீர்வு காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக தீவிரம்: மக்களவைத் தேர்தலில் அதிமுக களம் காணவுள்ள 20 தொகுதிகளிலும் போட்டியிட பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
   ஏற்கெனவே மக்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களும், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் போட்டியிட வாய்ப்புக் கோரி அதிமுக தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
   இதனால், மக்களவைத் தொகுதிகளில் யாரைக் களம் இறக்குவது என்பதிலும் பல சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. எனினும், திங்கள்கிழமைக்குள் (மார்ச் 18) வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
   மார்ச் 19-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால், அதற்கு முன்னதாக வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai