சுடச்சுட

  

  எளிய வாழ்வும், உயர் சிந்தனையும் நம் அடையாளம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

  By DIN  |   Published on : 17th March 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dsc

  எளிமையான வாழ்வும், உயர்ந்த சிந்தனையும் நமது அடையாளம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
   வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் "மகோற்சவம்-2019' என்ற தலைப்பில் முப்பெரும் விழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
   இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் கல்வெட்டைத் திறந்து வைத்து, சுவாமி தரிசனம் செய்து அவர் பேசியது:
   இப்பீடத்தின் 15-ஆவது ஆண்டு விழா, முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 16 தெய்வத் திருமணங்கள், 1,000 நாகஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் நாதசங்கமம் ஆகியவை வாரலாற்று நிகழ்வு.
   தன்வந்திரி பகவான், மருத்துவம் மற்றும் உடல்நலத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரம் என நம்பப்படும் தன்வந்திரி மூர்த்திக்கு ஹோமம் செய்து வந்தால் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், கடுமையான ஆரோக்கியப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் அது சிறந்த தீர்வாக அமையும்.
   உலகின் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு இங்கு மட்டுமே கோயில் எழுப்பப்பட்டுள்ளது பெருமைக்குரியது. இங்கு 54 கோடி தன்வந்திரி மகா மந்திரம் உலகம் முழுவதிலுமிருந்து 14 மொழிகளில் 46 லட்சம் மக்களால் எழுதப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
   நமது கலாசாரம் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்களால் இக்கலாசாரம் கட்டமைக்கப்பட்டது. இதை முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அழிக்க முயன்றனர். ஆனால், தர்மம் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டுள்ள காரணத்தால் நமது கலாசாரத்துக்கு அழிவு கிடையாது என சுவாமி விவேகானந்தர் தெரிவித்துள்ளார்.
   நமது கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவை உலகில் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.
   யோகாசனத்தால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளது. எளிமையான வாழ்வும், உயர்ந்த சிந்தனையும் நம் அடையாளம் ஆகும். நாம் எல்லோரும் எளிய வாழ்க்கை வாழப் பழக வேண்டும்.
   இந்த தன்வந்திரி கோயிலில் மாற்று சிகிச்சைமுறை சேவைகளை வழங்கி நோய்களை குணப்படுத்தும் நோக்கில், பக்தர்களின் ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெறவும், அனைத்து வகையான நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் முரளிதர சுவாமிகள் ஒவ்வோர் ஆண்டும் 365 நாள்களும் தன்வந்திரி ஹோமம் மற்றும் சகல தேவதா ஹோமங்களை நடத்தி வருகிறார்.
   விழாவில் ஆயிரம் நாகஸ்வரம், தவில் கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நாதசங்கமம் மிகவும் தனித்துவமானது. இந்தக் கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கமும், இந்தக் கலைகளின் கற்றல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதும் பாராட்டுக்குரியது.
   நமது கலாசாரம், பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். ஆன்மிகச் சேவையோடு, சமூக சேவையும் செய்து வந்தால் ஏழை எளிய மக்களின் நலன் மேம்பட உதவியாக இருக்கும் என்று ஆளுநர் பேசினார். சிறந்த மங்கல வாத்திய இசைக் கலைஞர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
   விழாவில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள், நிர்மலா முரளிதர சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜோதிமணி, ரெப்கோ வீட்டு வசதி நிதி நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஆர்.வரதராஜன், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் திரளான பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai