சுடச்சுட

  

  கல்வி சுதந்திரம், சம உரிமையே பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றும்: இந்தியன் வங்கி தலைமை செயல் அலுவலர்

  By DIN  |   Published on : 17th March 2019 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vr

  கல்வி சுதந்திரமும், சம உரிமையுமே பெண்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றும் என்று இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான பத்மஜா சுந்துரு தெரிவித்தார்.
   வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரூ.105 கோடி மதிப்பில் முன்னாள் பிரதமர்அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 13 அடுக்குகள் கொண்ட புதிய விடுதிக் கட்டடமும், ரூ.51 கோடி மதிப்பில் மகாத்மா காந்தி பெயரில் 5 மாடிகளைக் கொண்ட அகாதெமி பிளாக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளன.
   இக்கட்டடங்களின் திறப்பு விழா, சர்வதேச மகளிர்தின விழா ஆகியவை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான பத்மஜா சுந்துரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்துப் பேசியது:
   இந்தியன் வங்கி பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகும். இந்தியன் வங்கி அலுவலர்கள், ஊழியர்களில் 33 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் பணியில் உள்ளனர். இதன்மூலம் சமுதாயத்தின் பல்வேறு நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. பெண்களுக்கு கல்வி சுதந்திரம், சம உரிமை கிடைக்க வேண்டும். அதன்மூலம் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறுவர். இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் சுய உதவிக் குழு, மகளிர் குழுக்கள் மூலம் சிறுவணிக நிதி பெற்று தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.
   குடும்ப வாழ்க்கை என்றாலும், சேவைப் பணியாக இருந்தாலும் பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்க வேண்டும். அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் நல்வழிப்படுத்துவதன் மூலம் பெண்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்ல முடியும் என்றார் அவர். முன்னதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
   இந்திய மக்கள்தொகையில் 49 சதவீதம் பேர் பெண்கள். சேமிக்கும் பழக்கத்தில் பெண்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டபோது இந்தியாவில் அந்த நிலை ஏற்படாததற்கு நம் நாட்டுப் பெண்களிடையே காணப்படும் சேமிப்பு பழக்கமே காரணமாகும்.
   நாட்டில் பெண்களுக்கு சம அதிகாரம் வழங்குதல் என்பது பேச்சு வழக்கிலேயே உள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 22 ஆண்டுகளாகியும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
   கல்வியை எடுத்துக் கொண்டால் அரசியல் சாசனத்தில் 14 வயது வரை இலவசக் கல்வி என்ற நிலையை 18 வயது வரை என்று உயர்த்த வேண்டும். உலகில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டில் உயர்கல்வி பெறத் தகுதியுள்ளவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அந்த வாய்ப்பைப் பெறும் நிலை உள்ளது. அதற்கு நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி மிகக்குறைவாக இருப்பதே காரணமாகும். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்த வருவாயில் 6 சதவீத அளவுக்கு உயர்த்த மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
   நிகழ்ச்சியில், மகளிர் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பத்மஜா சுந்துரு பரிசு வழங்கினார். ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜி.முத்தழகி கெüரவ விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
   சிறப்பு விருந்தினர்களுக்கு விஐடிதுணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். விஐடி செயல் இயக்குநர் சந்தியா பெண்ட்டரெட்டி, துணை வேந்தர் ஆனந்த் சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி சோனல் சிங் நன்றி கூறினார்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai