சுடச்சுட

  

  தேசிய சட்டப் பல்கலை.யில் பயின்ற தூத்துக்குடி மாணவிக்கு 3 தங்கம்

  By DIN  |   Published on : 17th March 2019 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  satya

  திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சீர்மிகு இளங்கலை சட்டப்படிப்பு பயின்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஆர். சத்தியபார்வதி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.
   2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக் கழகத்தின் முதல் குழுவாக 69 மாணவ, மாணவிகள் சட்டம் பயின்றனர். 5 ஆண்டு சட்டப் படிப்பு முடிந்து சனிக்கிழமை பட்டம் பெற்றனர். இதில், 3 நிலைகளில் மாணவி ஆர். சத்தியபார்வதி தங்கப் பதக்கங்களை வென்றார். பல்கலை. அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் பெற்றார்.
   அதுமட்டுமின்றி மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்பதற்கான தங்கப் பதக்கமும், சிவில் உரிமை நடைமுறைச் சட்டம் என்ற பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றதற்கான தங்கப் பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்கள் பெற்றுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி, மகேஷ்லதா தம்பதியின் மகள் இவர். இவரது தந்தை ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள புள்ளியியல் துறையில் உதவி இயக்குநர்.
   பதக்கங்கள் வென்றது குறித்து ஆர். சத்தியபார்வதி கூறியது:
   ஆட்சியராக வேண்டும் என்பதே சிறுவயது ஆசை. 12-ஆம் வகுப்பு முடித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் சேரவில்லை. ஆட்சியராக வேண்டுமெனில் சட்டங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக சட்டப் படிப்பைத் தேர்வு செய்தேன். பருவத் தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பெற்று வந்தாலும் பதக்கம் பெறுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விரும்பிய துறையை தேர்வு செய்து கடினமாக உழைத்தால் சாதிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் வகையில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
   எனது தந்தை பணிபுரியும் ஆட்சியரகத்துக்கு சிறுவயதில் சென்றது முதலே நானும் ஆட்சியராக வர வேண்டும் என விரும்பினேன். அந்த இலக்கை நோக்கியே படித்து வருகிறேன் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai